UAE: Covid19 தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் போட வேண்டி வரலாம் என சுகாதாரத்துறை தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் குடியிருப்பாளர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இலவசமாக போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டியிருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC) வெளியிட்டுள்ள வீடியோவில், ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி, பருவகால காய்ச்சலுக்கு (influenza shots) போடப்படும் தடுப்பூசி போல கொரோனாவிற்கும் ஆண்டுதோறும் தடுப்பூசி போட வாய்ப்புள்ளது என்று விளக்கியுள்ளார்.
இருப்பினும், இது தொடர்பாக இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தடுப்பூசி போடும் திட்டம் துவங்கி ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களே முடிந்திருப்பதால், இந்த கட்டத்தில் தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோயெதிர்ப்பு சக்தியின் சரியான காலத்தை தீர்மானிப்பது கடினம். அதனைத் தீர்மானிப்பதற்கு இன்னும் சில காலங்கள் ஆகலாம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும், “தடுப்பூசியின் செயல்திறன் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வேறுபடலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமீபத்தில் சினோபார்ம் பூஸ்டர் கோவிட் தடுப்பூசியானது ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் போடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த பூஸ்டர் டோஸை குடியிருப்பாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் பெற முன்னுரிமை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் டோஸினைப் போட்டுக்கொள்வது கொரோனா வைரஸின் பல மாற்றங்களைக் கொண்டவற்றிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்று டாக்டர் அல் ஹொசனி விளக்கியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், பூஸ்டர் டோஸ் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.