துபாயில் ட்ரோன்கள் மூலம் முக கவசம் அணியாத 518 நபர்களைக் கண்டறிந்து அபராதம் விதித்த காவல்துறை..!!
அனைத்து துறைகளிலும் நவீனங்களைப் புகுத்தி வருவதில் முதன்மையாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில், தற்பொழுது ட்ரோன்களின் மூலம் விதிமீறல் புரியும் குடியிருப்பாளர்களைக் கண்டறிந்துள்ளது துபாய் காவல்துறை.
துபாயில் இருக்கக்கூடிய நைஃப் பகுதியில் மேம்பட்ட ட்ரோன்கள் மூலம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 518 நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து நைஃப் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் தாரிக் தஹ்லக் அவர்கள் கூறுகையில், பல்வேறு வகையான மீறல்களைக் கண்டறிய ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் இப்பகுதியில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ட்ரோன்கள் சமீபத்திய முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைக் (latest face recognition technology) கொண்டுள்ளன, மேலும் இதன் மூலம் குறுகிய வீதிகளிலும் சந்துகளிலும் காட்சிகளை பதிவுசெய்ய முடியும். ஆண்டின் முதல் காலாண்டில், முக கவசங்கள் அணியாத 518 பேரை ட்ரோன்கள் கண்டுபிடித்தன” என கூறியுள்ளார் தஹ்லக்.
COVID-19 ஐக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்களைப் கண்டு பிடிப்பதைத் தவிர, மற்ற குற்றங்களைக் கண்டறியவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு ட்ரோன்களால் முக கவசம் அணியாதது உட்பட மொத்தம் 4,400 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2,933 அபராதங்கள் போக்குவரத்து விதிமீறல் புரிந்தோருக்கும், 128 அபராதங்கள் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், காவல்துறையால் தேடப்பட்டு வந்த 159 கார்களுக்கும் மற்றும் 706 அபராதங்கள் இ-ஸ்கூட்டர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காகவும் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. அதே போல், ட்ரோன்கள் உதவியால் 37 அபராதங்கள் விதிமீறல் புரிந்த பாதசாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தஹ்லக் மேலும் கூறுகையில், “இந்த திட்டம் தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டது. வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட நைஃப் பகுதியில் இரண்டு ட்ரோன்களைப் பயன்படுத்தினோம். ட்ரோன்கள் மூலம் நபரின் முகங்களை மற்றும் வாகன எண்களை அடையாளம் காணலாம், மேலும் தெருக்களின் நெருக்கமான காட்சிகளை மக்கள் உணர முடியாத வகையில் எடுக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தெருக்களில் சட்டவிரோதப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை ட்ரோன்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர் என்றும், இந்த புதிய முயற்சியானது குற்றங்களைத் தடுக்க பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் தஹ்லக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.