மே மாதத்தில் மட்டும் 1.9 மில்லியன் பயணிகள்..!! உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் என பெயரெடுத்த துபாய் விமான நிலையம்..!!
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் மிகப்பெரிய அளவிலான கோவிட் -19 தடுப்பூசித் திட்டத்தின் விளைவால் விமானப் பயண சேவைகள் மற்றும் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டு பெருமளவு விமானப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருவதால், மே மாதத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் (DCB) உலகின் பரபரப்பான விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான உளவுத்துறை நிறுவனமான OAG (Official Airline Guide) இன் தரவுகள் படி, துபாய் விமான நிலையத்தின் திட்டமிடப்பட்ட பயணிகளின் திறனானது மே மாதத்தில் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் பயணிகள் என இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதே போல், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 5.75 மில்லியன் பயணிகளைக் கையாண்டு, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச பயணிகளுக்கான பரபரப்பான விமான நிலையமாக DXB தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
விமான நிலையங்கள் கவுன்சில் இன்டர்நேஷனல் படி, 2014 ம் ஆண்டு, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தை முந்திய பின்னர், தொடர்ந்து ஏழாவது ஆண்டான 2020 வரை சர்வதேச பயணிகளுக்கான பரபரப்பான விமான நிலையம் என்ற தகுதியை DXB பராமரித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் அந்த தகுதியை துபாய் விமான நிலையம் தக்க வைத்துக்கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு, கோவிட் -19 தொற்றுநோயானது விமான நிலையங்களை மூடுதல், விமான சேவையை நிறுத்தி வைத்தல் போன்றவற்றினால் விமானத் துறையில் பெரும் சரிவை ஏற்படுத்திய போதிலும் துபாய் விமான நிலையமானது அத்தகைய காலத்திலும் கூட 25.9 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது.
துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள், 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சர்வதேச பயணிகள் போக்குவரத்து 7.61 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதில் ஏப்ரல் மாதத்தில் 1.87 மில்லியன் பயணிகள் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால் துபாய் விமான நிலையங்களில் சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டபோது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் DXB கையாண்ட 39,794 பயணிகளுடன் இந்த ஆண்டு ஏப்ரல் மாத பயணிகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
OAG தரவுகளின் படி, துருக்கியின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் 1.3 மில்லியன் இடங்களைக் கொண்ட இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாகவும், தோஹா விமான நிலையம் 1.22 மில்லியனாகவும், ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் ஒரு மில்லியனாகவும் தெரிவிக்கப்பட்டு அவை மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளன.
பிராங்பேர்ட் சர்வதேச விமான நிலையம் (Frankfurt International Airport), பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையம் (Charles de Gaulle Airport in Paris), லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் (London’s Heathrow Airport), மியாமி சர்வதேச விமான நிலையம் (Miami International Airport), ஜான் எஃப் கென்னடி நியூயார்க் விமான நிலையம் (John F Kennedy New York Airport) மற்றும் தென் கொரியாவின் இஞ்சியோன் சர்வதேச விமான நிலையம் (Incheon International Airport in South Korea) ஆகியவை பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.