அமீரகத்தில் 2021 ம் வருட ‘ஈத் அல் பித்ர்’ விடுமுறை தினங்களை அறிவித்த பெடரல் ஆணையம்..!!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் இன்னும் ஒரு வாரத்தில் முடியவிருக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களை மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பெடரல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அரேபிய மாதமான ரமலான் மாதம் 29 முதல் ஷவ்வால் மாதம் 3 வரை இந்த வருடத்திற்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி ரமலான் நோன்பானது 29 நாட்கள் நீடித்தால், அரசு ஊழியர்களுக்கு மே 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மே 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நான்கு நாள் விடுமுறையாக கொண்டாடப்படும்.

ஆனால் ரமலான் நோன்பானது 30 நாட்கள் நீடித்தால், விடுமுறையானது மே 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மே 15 ஆம் தேதி சனிக்கிழமை வரை, அதாவது ஐந்து நாட்களாக கொண்டாடப்படும்.

அமீரகத்தில் பணிபுரியும் தனியார்துறை ஊழியர்களுக்கு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த இரு வருடங்களாக தனியார் துறை சார்ந்த ஊழியர்களுக்கும் அரசு துறை ஊழியர்களுக்கு போன்றே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

புனித ரமலான் மாதம் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.