அமீரக செய்திகள்

5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடினால் 50,000 திர்ஹம் அபராதம்..!! ஈத் அல் பித்ரை முன்னிட்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.

அதே போல், ஈத் விமுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துபாய் காவல்துறை கூறுகையில், துபாயில் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக ஒன்று கூட தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீறினால் அத்தகைய நிகழ்வை ஏற்பாடு செய்தவருக்கு 50,000 திர்ஹம் அபராதமும், அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் 15,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளின் மீறல்களைக் கண்காணிக்க கூடுதல் காவல்துறை ரோந்துப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக துபாயின் பொதுப் போக்குவரத்துத் துறை இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் சைஃப் முஹைர் சயீத் அல் மஸ்ரூய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேராத மூன்று நபர்களுக்கு மேல் ஒரே காரில் பயணம் செய்தால், காவல்துறை அவர்களுக்கு அபராதம் விதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் முழுவதும் ஒரு ஷிஃப்டுக்கு 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நிறுத்தப்படுவார்கள் என்றும், கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறிய துபாய் காவல்துறையுடன் சுமார் 700 தன்னார்வலர்கள் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால தயார்நிலை

ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தின் படி, 111 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 72 தீயணைப்பு வண்டிகள் எந்தவொரு அவசரநிலைகளுக்கும் காத்திருக்கின்றன என்றும், துபாயின் ஒன்பது கடற்கரைகளில் சுமார் 24 போலிஸ் ரோந்து மற்றும் 18 இரு சக்கர ரோந்துகள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், அபராதங்களைத் தவிர்ப்பதற்காக கொரோனாவிற்கான பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும் காவல்துறையினர் குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அபுதாபி

அதே போல், அபுதாபியில் கூட்டமாக ஒன்று கூடுவதற்கு 10,000 திர்ஹம் அபராதமும் அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் 5,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிதல் மற்றும் சமூக தொலைவு உள்ளிட்ட அனைத்து கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்குமாறு அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் சமூக நடைமுறைகளைத் தவிர்க்குமாறு காவல்துறை குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது.

கொரோனாவிற்கான பாதுகாப்பு விதிகளின் மீறல்களை குடியிருப்பாளர்கள் 8002626 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அபுதாபி காவல்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!