எமிரேட்ஸ் விமானத்தில் தனி ஒரு ஆளாக பயணம்..!! Dh1,600 சம்பளத்தில் இருந்து Dh2.4 பில்லியன் டர்ன்ஓவர் கொண்ட கம்பெனியின் CEO-வான இந்தியர்..!!
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமான சேவையானது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், உலகின் மிக முக்கிய விமானங்களில் ஒன்றான துபாயின் எமிரேட்ஸ் விமானத்தில் மும்பையில் இருந்து தனி ஒரு ஆளாக துபாயை வந்தடைந்திருக்கிறார் பவேஷ் ஜாவேரி எனும் இந்தியர்.
வைர வியாபாரி மற்றும் DMCC-ஐ தளமாகக் கொண்ட ஸ்டார்ஜெம்ஸ் BVBA-வின் தலைமை நிர்வாக அதிகாரியான (DMCC-based Stargems BVBA) ஜாவேரி இந்த விமான பயணத்திற்கான டிக்கெட்டுக்கு சுமார் 980 திர்ஹம் செலுத்தியுள்ளார்.
350 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட போயிங் 777 விமானத்தில் அவருக்கு 18 A இருக்கை ஒதுக்கப்பட்டு அவர் மட்டுமே பயணித்து துபாய் வந்திறங்கியுள்ளார்.
அமீரக அரசானது கடந்த ஏப்ரல் 24 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க தடை விதித்தது. இருப்பினும் இந்த பயணத் தடையானது அரசுப் பிரதிநிதிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் போன்றோருக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த தடை குறைந்தபட்சம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று எமிரேட்ஸ் இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 20 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் ஜாவேரி, EK501 என்ற விமானத்தில் தனி ஒரு பயணியாக பயணித்த அனுபவத்தினை வீடியோவாக வெளியிட அது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அவர் கூறுகையில், “நான் விமான நிலையத்திற்குள் நுழைந்தவுடன், விமானத்தில் பயணிக்க நான் மட்டுமே இருப்பதை உணர்ந்தேன். இது ஒரு தனித்துவமான உணர்வும் அனுபவமும் ஆகும். நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், பின்னர் நான் எனது பயணத்தை ஒரு குறுகிய வீடியோவை உருவாக்க முடிவு செய்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற எனது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் அந்த வீடியோவை பகிர்ந்தேன். பின்னர் அங்கிருந்து அது வாட்ஸ்அப்பில் வைரலாகியது” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் ரெசிடென்ஸி விசா வைத்திருக்கும் ஜாவேரி தெரிவித்துள்ளார்.
அவரை விமானத்தில் ஏறியதுடன் அனைத்து விமான பணியாளர்களும் கைதட்டி அவரை எமிரேட்ஸ் கேபின் குழுவினர் அன்புடன் வரவேற்றதாக கூறியுள்ளார்.
மேலும் விமானி ஒருவர், “நீங்கள் மட்டுமே இங்கு இருப்பதால் நான் உங்களுக்கு முழு விமானத்தையும் சுற்றிக்காட்டுகிறேன்” என தெரிவித்ததாகவும் ஜாவேரி கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் அதிகாலை 4.30 மணிக்கு விமானத்திற்குள் நுழைந்தபோது மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆனால் விமானம் புறப்பட்டதன் பின்னர் நான் தூங்கிவிட்டேன். விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தான் நான் விழித்தேன். விமானத்தை சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது”
“இப்படி ஒரு பயணத்தை எனக்கு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு குழு, பைலட் மற்றும் எமிரேட்ஸ் ஆகியோருக்கு மிகப் பெரிய நன்றி. எனக்கு இது மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாகும்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து துபாய்க்கு பிழைப்பு தேடி வந்து தனது கடின உழைப்பால், மிகப்பெரிய தொழிலதிபர்களாக உயர்ந்த பல இந்தியர்களில், தற்போது துபாயை தளமாகக் கொண்ட ஸ்டார்ஜெம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ஜாவேரியும் ஒருவர் ஆவார்.
“நான் 2001 ல் துபாய் வந்தபோது, என்னிடம் எதுவும் இல்லை. நான் 1,600 திர்ஹம் சம்பளத்துடன் ஒரு நகைக் கடையில் விற்பனையாளராக இருந்தேன். நாங்கள் 2004 இல் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினோம், அதன் பின்னர் இது ஒரு மேல்நோக்கிய பயணமாக இருந்தது. இப்போது, நாங்கள் 2020 ஆம் ஆண்டில் 650 மில்லியன் டாலர் (2.4 பில்லியன் திர்ஹம்) வருவாய் ஈட்டிய ஒரு சர்வதேச நிறுவனமாக உயர்ந்துள்ளோம்” என்று ஜாவேரி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.