அமீரக செய்திகள்

அமீரகத்தில் தனது நிறுவனத்திற்கான 100% ஓனர்ஷிப்பைப் பெறும் முதல் நபரான இந்தியர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் எமிராட்டி ஸ்பான்சர் இல்லாமல் தொழில் தொடங்கலாம் என்று அமீரக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்த சட்டமானது தற்போது வரும் 2021 ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த புதிய சட்டம் அமீரகத்தில் தொழில்புரியும் முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்கள் நிறுவனங்களின் முழு உரிமையை அதாவது 100 சதவீத ஓனர்ஷிப்பை அனுமதிக்கும் என்றும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, அமீரகத்தில் 100 சதவீத வெளிநாட்டு உரிமை அந்தஸ்து வழங்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரக கார்ப்பரேட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார் ராஸ் அல் கைமாவில் நிறுவனத்தை இயக்கி வரும் இந்தியரான தர்மதேவ் பட்.

அவர் இயக்கி வரும், ராஸ் அல் கைமாவில் உள்ள அம்பர் பேக்கேஜிங் (Amber Packaging) எனும் LLC நிறுவனமானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் முற்றிலும் வெளிநாட்டு ஓனர்ஷிப் கொண்ட நிறுவனமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தர்மதேவ் கூறுகையில், “கடந்த மாதத்தில் தான் எங்களுக்கு 100 சதவீத உரிமையை வைத்திருக்க முடியும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் ராஸ் அல் கைமாவில் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே முழுவதும் வெளிநாட்டு ஓனர்ஷிப் கொண்ட முதல் LLC நிறுவனமாக மாறியுள்ளோம்” என்று ராஸ் அல் கைமாவில் பேக்கேஜிங் பொருட்களின் செயல்பாடுகளுக்காக மூன்று இடங்களை வைத்திருக்கும் பட் கூறியுள்ளார். மேலும் ராஸ் அல் கைமா முதலீட்டு ஆணையம் (RAKIA) தான் இது குறித்து தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களுக்கு (LLC – Limited Liability Company) முழு வெளிநாட்டு உரிமையை அனுமதிப்பது பல்வேறு பெரிய அளவிலான நிறுவனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். அமீரகத்தில் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து தற்பொழுது வரை, LLC-களை உருவாக்கி, எமிராட்டி ஸபான்சருக்கு பெரும்பான்மை பங்குகள் வழங்கப்பட்டே நிறுவனங்களை இயக்கி வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முறையான கோரிக்கை தேவையில்லை

தங்களின் நிறுவனத்திற்கு முழு ஓனர்ஷிப்பைப் பெறுவது குறித்து தனது தரப்பிலிருந்து முறையான பரிந்துரைகள் எதுவும் கொடுக்கவில்லை என்று பட் கூறுகிறார். இந்த முழு ஓனர்ஷிப் குறித்த விருப்பத்தைக் கிடைக்கச் செய்தது RAK அதிகாரிகள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது நிறுவனம் பற்றி அவர் கூறுகையில், “நாங்கள் 2012 ஆம் ஆண்டில் RAK-ல் தொழில்புரிய தொடங்கினோம். இரண்டு ப்ளாண்ட்கள் மற்றும் ஒரு பணியாளர்கள் தங்குமிடம் என சுமார் 180 மில்லியன் திர்ஹம் முதலீடு செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக கூட்டாட்சி அதிகாரிகளும் தனிப்பட்ட எமிரேட்ஸில் உள்ளவர்களும் ஐக்கிய அரபு அமீரகம் அல்லாத வேறு ஒரு நாட்டினரின் 100 சதவீத உரிமையை அனுமதிக்கும் வணிகங்கள் மற்றும் துறைகளை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், ஒவ்வொரு எமிரேட்ஸிலும் இருக்கக்கூடிய பொருளாதார மேம்பாட்டுத் துறை 100 சதவீத வெளிநாட்டு ஓனர்ஷிப் பெறவதற்கான நிறுவனங்கள் குறித்து தங்களது சொந்த பட்டியல்களைக் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

“எங்களுடன், அனைத்து ஆவண வேலைகளும் முடிவடைவதற்கும், உரிமையின் மாற்றம் முறையாக பதிவு செய்யப்படுவதற்கும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலம் எடுத்தது” என்று பட் கூறியுள்ளார்.

முதலில் ஷார்ஜாவில் கடந்த 2006 ம் ஆண்டில் தொழில் புரிய துவங்கியதாகவும், அங்கு தொழிலானது நல்ல நிலையை அடைந்ததால் பின்னர் ராஸ் அல் கைமாவிலும் தொழிலை விரிவுபடுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

RAK இல் முழு உரிமையையும் பெற்றுள்ளதால், ஷார்ஜாவிலும் அதைப் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பட் தெரிவித்துள்ளார்.

ஆம்பர் பேக்கேஜிங் நிறுவனமானது, உணவு மற்றும் பால், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற நுகர்வோர் எதிர்கொள்ளும் தொழில்களுக்கு அவை சிறப்பு பேக்கேஜிங்கை தயாரிக்கின்றன.

தனது நிறுவனத்தின் ஓனர்ஷிப் ஸ்டேடஸ் மாறியதற்குப் பின்னர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற அதிக இலாபம் ஈட்டக்கூடிய சந்தையில் ஏற்றுமதி மேற்கொள்ள நிறுவனம் முயற்சிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!