துபாய் மெட்ரோவில் புதிதாக இரண்டு மெட்ரோ நிலையங்கள் வரும் ஜூன் 1 முதல் திறக்கப்பட இருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, ஜூன் 1 முதல் மெட்ரோ கிரீன் லைனிற்கான தினசரி பயண நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்படவிருக்கும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் ஸ்டேஷன் மற்றும் எக்ஸ்போ 2020 ஸ்டேஷன் ஆகிய இரண்டு புதிய நிலையங்களை ஒரே தேதியில் திறக்க இருப்பதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருக்கின்றது.
ரூட் 2020 திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு துபாய் இண்வெஸ்ட்மென்ட் பார்க் மற்றும் எக்ஸ்போ 2020 நிலையம் திறக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர், இந்த வருடம் ஜனவரி 1 ஆம் தேதி ஜெபல் அலி, தி கார்டனஸ், தி டிஸ்கவரி கார்டன்ஸ் மற்றும் அல் ஃபுர்ஜன் ஆகிய நிலையங்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் டைரக்டர் ஜெனரல் மேட்டர் முகமது அல் தயர் கூறுகையில், ” ஜெபல் அலி ஸ்டேஷன், UAE எக்ஸ்சேஞ்ச் ஸ்டேஷனுக்குச் செல்லும் அல்லது வருபவர்களுக்கு ஒரு பரிமாற்ற நிலையமாக (interchange station) இருக்கும். ஜூன் 1 முதல், எக்ஸ்போ 2020 மெட்ரோ சேவையானது எக்ஸ்போ தளத்தை அணுக உரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி எக்ஸ்போ அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் இந்த மெட்ரோ சேவையை எக்ஸ்போவுக்குப் பயன்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
பயண அட்டவணைகள்
சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை, அல் ரஷீதியா நிலையத்திலிருந்து எக்ஸ்போ 2020 ஸ்டேஷன் மற்றும் அதே போல் எக்ஸ்போ 2020 ஸ்டேஷனில் இருந்து ரஷீதியா ஸ்டேஷன் வரை முதல் பயணமானது அதிகாலை 5 மணிக்கு தொடங்கும், கடைசி பயணம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வியாழக்கிழமை, முதல் பயணம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும், கடைசி பயணம் அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, முதல் பயணம் காலை 10 மணிக்கு தொடங்கும் மற்றும் கடைசி பயணம் அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கும் என்றும் அல் ரஷீடியா மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் 1 மணி நேரம் 14 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையானது உச்ச நேரத்தில் 2 நிமிடங்கள் 38 வினாடிகள் என்ற சேவை அதிர்வெண்ணில் ஒரு திசையில் ஒரு மணி நேரத்திற்கு 24 ரயில்கள் என்ற விகிதத்தில் இருக்கும், மேலும் ஒரு திசையில் ஒரு மணி நேரத்திற்கு 16,000 பயணிகள் பயணிக்க திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் தயர் மேலும் கூறுகையில், “ஜெபல் அலி நிலையத்திற்கும் UAE எக்ஸ்சேஞ் நிலையத்திற்கும் இடையிலான பயண நேரம் 11 நிமிடங்கள் 42 வினாடிகள் ஆகும், இந்த நிலையான சேவையானது 7 நிமிடங்கள் 30 வினாடிகள் என்ற சேவை அதிர்வெண்ணில் இயங்கும். கிரீன் லைன் சேவையின் ஆரம்பம் அதிகாலை 5 மணியாக மேம்படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.