Covid19: இனி வெளிநாட்டில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டியை அனுப்பி வைக்கலாம்..!! அனுமதி அளித்த இந்திய அரசு..!!

கொரோனாவின் கோர தாண்டவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இந்தியாவில் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், தற்பொழுது ​​வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (Oxygen Concentrator) அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்திய அரசு, பரிசு பிரிவின் கீழ், தபால், கூரியர் அல்லது ஈ-காமர்ஸ் போர்ட்டல்கள் மூலம் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFD) அறிவிப்பின்படி, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் செறிவூட்டல்களை அனுப்புவதற்கு ஜூலை 31 வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இ-காமர்ஸ் போர்ட்டல்களில் இருந்து வாங்கிய பொருட்கள் உட்பட, தபால் அல்லது கூரியர் மூலம், உயிர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றிற்கு சுங்கவரி தடைசெய்யப்பட்டுள்ளது” என்று அறிவிப்பு விளக்கியது. நாட்டில் அதிக அளவு ஆக்ஸிஜனுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஆக்ஸிஜன் செறிவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, மருத்துவ சில்லறை விற்பனையாளர்கள், குடியிருப்பாளர்கள் ஆக்ஸிஜனேட்டரை (Oxygenator) சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்தோ அல்லது ஆன்லைனிலிருந்தோ வாங்கி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த தயாரிப்பு amazon.ae, noon.com மற்றும் desertcart.ae போன்ற ஈ-ஷாப்பிங் போர்ட்டல்களிலும் கிடைக்கிறது. இருப்பினும், மே 25 ம் தேதிக்குப் பிறகுதான் விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்தர் TM. ஹெல்த்கேரின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஜோஸ் ஸ்ரீதரன் கூறுகையில், “ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் தேவை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருவதால், தற்போதுள்ள சரக்குகள் குறைந்து வருகின்றன. நாங்கள் அஸ்தெர் மருந்தகங்களில் பரவலான அளவில் ஆக்ஸிஜன் செறிவுகளை வைத்திருக்கிறோம், ஆனால் அத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்துவது ஒரு மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் உள்ளது”

“நாங்கள் அனைத்து உள்ளூர் விநியோகஸ்தர்கள் மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் மிகவும் நேர்மறையான பதிலைப் பெற்றுள்ளோம், அடுத்த ஐந்து முதல் பத்து நாட்களில் புதிய சரக்குகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவற்றை ஆன்லைனில் https://asteronline.com/ இல் கிடைக்கச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் 3,500 திர்ஹம் முதல் 6,000 திர்ஹம் வரையுள்ள செறிவூட்டிகள் ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்ஸிஜனையும், 7,000 முதல் 9,000 திர்ஹம் வரையுள்ளவை நிமிடத்திற்கு 10 லிட்டர் ஆக்ஸிஜனையும் வழங்கும் என கூறப்படுகின்றது.

இந்திய வழிகாட்டுதலின் கீழ், ரூ.1,000 (50 திர்ஹம்) க்கும் அதிக மதிப்புள்ள பரிசுகளுக்கு சுங்க வரி மற்றும் GST ஆகியவை விதிக்கப்படும். ஆனால் தற்பொழுது ஆக்சிஜன் தொடர்பான பல உபகரணங்களுக்கான அடிப்படை சுங்க வரியை ஜூலை வரை அரசு நிறுத்தியுள்ள நிலையில், GST மட்டும் செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டி (Oxygen Concentrator) என்றால் என்ன?

சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து, தேவையான நோயாளிகளுக்கு அளிக்க உதவும் மருத்துவ சாதனமே ஆக்சிஜன் செறிவூட்டியாகும். அஸ்தெர் மருத்துவமனையின் ஒரு முக்கியமான பராமரிப்பு மருந்து (நிபுணர்) டாக்டர் சைதன்யா பிரகாஷ் பிரபு கூறுகையில், “இயல்பான காற்று 79 சதவீத நைட்ரஜனும் 21 சதவீத ஆக்ஸிஜனும் கொண்டது. COPD ஆஸ்துமா மற்றும் கோவிட் நிமோனியா போன்ற குறைந்த அளவு ஆக்ஸிஜனுடன் போராடுபவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்”.

“நுரையீரல் பாதிப்புள்ள நபர்களுக்கு அதிகளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். அதனால் சாதாரண காற்றை ஆக்ஸிஜனாக மாற்ற வேண்டும். ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டி வழக்கமான காற்றை எடுத்து வடிகட்டி 90-95 சதவிகிதம் ஆக்ஸிஜனாக சுத்திகரிக்கிறது. எங்களிடம் பல்வேறு வகையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளன. O2 செறிவூட்டிகள் அளவு, எடை, சக்தி மற்றும் திறன் ஆகியவற்றில் வேறுபடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் ஆக்ஸிஜன் செறிவூட்டியை எப்போது பயன்படுத்த வேண்டும்?

90-94 க்கு இடையில் ஆக்ஸிஜன் செறிவு அளவைக் கொண்ட லேசான மற்றும் மிதமான நோயாளிகள் மட்டுமே ஆக்ஸிஜன் செறிவூட்டியை சார்ந்து இருக்க வேண்டும், அதை வீட்டிலேயே பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.

அதிக ஆக்ஸிஜன் தேவைகள் உள்ள ஒருவருக்கு, ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒரு சிறந்த வழியாகும். ஆக்ஸிஜன் செறிவூட்டி அல்லது சிலிண்டரைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் பரிந்துரையை கண்டிப்பாக எடுக்குமாறு மருத்துவர்கள் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.