Covid19: வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை..!! ஒப்புதல் அளித்த அமீரகம்..!!
கொரோனாவிற்கான மிகவும் பயனுள்ள புதிய சிகிச்சையினை அவசரகால பயன்பாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
சோட்ரோவிமாப் (வீர் -7831) – Sotrovimab (Vir-7831) எனும் மருந்தை அவசரகால பயன்பாட்டிற்கு சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உரிமம் பெறும் மற்றும் உடனடி நோயாளி பயன்பாட்டை இயக்கும் உலகின் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். இந்த மருந்துக்கு சமீபத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
சோட்ரோவிமாப் (Sotrovimab) என்பது ஒரு ஒற்றை-டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடியாகும் (monoclonal antibody). இது பெரியவர்கள் மற்றும் குழந்தை நோயாளிகளுக்கு லேசான முதல் மிதமான கோவிட் -19 சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மற்றும் இந்த சிகிச்சை பெறுபவர்கள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாகவும் குறைந்தது 40 கிலோ எடையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாசோஸ்மித்க்லைன் (GlaxoSmithKline – GSK) மற்றும் வீர் பயோடெக்னாலஜி (Vir biotechnology) ஆகியவை இந்த மருந்தை உருவாக்கியுள்ளன. மருத்துவ சோதனைகள் இந்த மருந்து நேரடி சார்ஸ்-கோவி -2 வைரஸ் பரிசோதனையின் நேர்மறையான சிகிச்சை முடிவுகளைக் காட்டுகிறது என்றும், வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை அல்லது இறப்பது உட்பட கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான ஆரம்ப சிகிச்சையாக நோயாளிகளுக்கு நிர்வகிக்கப்படும் போது 24 மணி நேரத்திற்கும் மேலாக, வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் இறப்புகளை 85 சதவிகிதம் வரை குறைப்பதற்கான வாய்ப்பை இந்த சிகிச்சை அளிப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், மருத்துவத்திற்கு முந்தைய ஆய்வுகளில், சோட்ரோவிமாப் இந்தியாவில் இருந்து வந்த உருமாறிய கொரோனா வைரஸ் உட்பட பரவலாக பரவுகின்ற உருமாறிய வைரஸிற்கு எதிரான ஒரு மோனோ தெரபியாக சிறப்பாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வீரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ஸ்காங்கோஸ் கூறுகிறார்.
அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஓவைஸ், “புதிய மருந்து நோயாளிகள் குணமடைவதை விரைவுபடுத்துவதற்கும், கோவிட் -19 தொடர்பான மரணங்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் மருத்துவமனையில் சேர்க்கும் காலத்தை குறைப்பதற்கும் பெரிதும் உதவும்.” என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “கோவிட் -19 சோதனைகளை நடத்துவதற்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கும் நாட்டின் முயற்சிகளை இது ஆதரிக்கும்.” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த மருந்தின் ஆரம்பகால அணுகலை உறுதி செய்வதற்காக அமைச்சகம் ஏற்கனவே நெறிமுறைகளை வகுத்துள்ளதுடன், மருத்துவரின் சரியான பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களையும் வகுத்துள்ளது.