ADVERTISEMENT

அமீரகத்தில் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு மேலும் ஒரு பூஸ்டர் தடுப்பூசி..!! NCEMA அறிவிப்பு..!!

Published: 21 May 2021, 1:20 PM |
Updated: 21 May 2021, 1:20 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் தற்போது அதன் பூஸ்டர் வகை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என்று அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு (NCEMA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தகுதி பெறுவார்கள் என்றும் பேரிடர் மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை ஐக்கிய அரபு அமீர்கத்தின் சமூகத்திற்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கான செயல்திறன்மிக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் எனவும் அது கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹோசானி இந்த அறிவிப்பு குறித்து கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதற்கான முன்னுரிமை வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வகை பூஸ்டர் தடுப்பூசிகள் பொதுவாக நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. அமீரகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டர் தடுப்பூசி பெற்றதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 16 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களில் 73.88 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட் -19 தடுப்பூசி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, கொரோனா வைரஸ் மற்றும் அதன் சிக்கல்களால் அதிகம் பாதிக்கப்பட கூடிய 80 சதவீதத்திற்கும் அதிகமான வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் இதுவரையிலும் அமீரகத்தில் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு டோஸுகளையும் சேர்த்து மொத்தம் 11.59 மில்லியன் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகமும் (MoHAP) தெரிவித்துள்ளது. .