இந்தியாவில் இருந்து ஓமான் வருவதற்கான பயணத்தடை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு..!! உச்சக்குழு தகவல்..!!
கொரோனா பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஓமான் நாட்டின் கொரோனாவிற்கான உச்சக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஓமான் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் குடிமக்கள் வேலைக்காக அதன் நில எல்லைகளை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், சுகாதார காரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தொற்றுநோய் தொடர்பான பிற கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாகவும் ஓமான் அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான தடையை ஓமான் மேலும் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதே போல் தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் இருந்து வருபவர்களுக்கும் ஓமான் வர அனுமதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி, மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் 100 க்கும் குறைவான மக்கள் திறன் கொண்ட மசூதிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் இருப்பினும் முஸ்லிம்களுக்கு தினசரி ஐந்து வேளை தொழுகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிக நடவடிக்கைகள் 50 சதவீத திறனில் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும், மேலும் திருமணங்கள் போன்ற சமூக செயல்பாடுகள் 30 சதவீத திறனில் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.