கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்கப்படும்..!! நிறுவனம் அறிவிப்பு..!!
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு 10 ஆண்டுகள் வரை நிதியுதவி வழங்கும் என்று வளைகுடா நாடுகளில் இயங்கி வரும் ஹெல்த்கேர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மருத்துவத்துறையில் சிறந்து விளங்கி வரும் அஸ்தர் T.M ஹெல்த்கேர் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரையிலும் அந்நிறுவனத்தில் ஐந்து ஊழியர்கள் கொரோனாவிற்கு உயிரிழந்ததாக சுகாதாரக் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, நிறுவனம் செயல்பட்டு வரும் ஏழு நாடுகளில் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் 2,880 மருத்துவர்கள், 6,280 செவிலியர்கள் மற்றும் 11,000 உதவி ஊழியர்கள் முன்னணியில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 5,150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்தர் T.M ஹெல்த்கேரின் நிறுவனர் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆசாத் மூபன் கூறுகையில், “கோவிட் -19 க்கு எதிரான இந்த போரில் தங்கள் அர்ப்பணிப்பைக் கொடுக்கும் எங்கள் ஊழியர்கள் உண்மையாகவே ஹீரோக்கள். நோயாளிகளை அவர்கள் தங்கள் வாழ்க்கையை விட பெரிதாக நினைக்கிறார்கள்”.
“பாதிக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலோர் கொரோனாவிற்கு எதிரான போரைத் தொடர மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களில் ஒரு சிலர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் என தனது குடும்பங்களை விட்டுப் பிரிந்து சென்றுள்ள நிலையில், இறந்தவர்களில் சிலர், தங்கள் குடும்பங்களில் உழைக்கும் ஒரே நபராக இருந்ததால் அவர்களின் குடும்பங்களுக்கு சில ஆதரவை வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்” என கூறியுள்ளார்.
புதிய கொள்கையின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கோவிட் -19 காரணமாக இறந்த ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை (Basic salary) அவர்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் GCCயில் உள்ள அனைத்து அஸ்தர் T.M ஹெல்த்கேர் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்தெர் T.M ஹெல்த்கேர் இன்றுவரை 28,000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது மற்றும் தனது நிறுவனம் இயங்கி வரும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளது.