அடுத்த 18 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிஸியான வழித்தடமாக இந்தியா- அமீரகம் இருக்கும்..!! IATA தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான விமான வழித்தடங்கள் 2021 மற்றும் 2039 க்கு இடையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பயண வழித்தடமாகவும், பயணிகளின் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் 6.9 சதவீதம் அதிகரிக்கும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில், உலகளாவிய விமானப் பயணிகளின் வளர்ச்சி இதே 1.5 முதல் 3.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மற்ற இரண்டு சர்வதேச வழித்தடங்களான சீனா-தாய்லாந்து இடையேயான வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 5.6 சதவீதமும், சீனா மற்றும் ஜப்பான் வழித்தடம் ஒவ்வொரு ஆண்டும் 4.6 சதவீதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்பொழுது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பால் இந்தியாவில் இருந்து அமீரகம் வர தடை விதிக்கப்பட்டு மறு அறிவிப்பு வரும் வரையிலும் தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் இந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை திறன் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IATA வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உள்நாட்டு விமான பயணத்தைப் பொறுத்தவரை, மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6.2 சதவீதம் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சீனா 5 சதவீத வளர்ச்சியைக் காணும் என்றும், உலகின் மிகப்பெரிய விமானச் சந்தையான அமெரிக்கா ஆண்டுதோறும் 1.4 சதவீதம் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கையில் வளர்ச்சியைக் காணும் என்றும் கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் தான், உலகளாவிய பயணிகளின் எண்ணிக்கை COVID க்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்பும் என்று IATA கணித்துள்ளது. அதே வேளையில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் 2024 க்குள் இயல்பு நிலை திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கொரோனாவிற்கு முன்னர் இருந்த நிலைகளில் 52 சதவீதத்தை அடையும், மேலும் 2022 ஆம் ஆண்டில் இது 88 சதவீதமாக உயரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.