மரண தண்டனை கைதிக்கு 1 கோடி இழப்பீடு செலுத்தி உதவி..!! விடுதலை ஆனதும் தனது நிறுவனத்திலேயே வேலை..!! மக்கள் மனதை வென்ற லுலு யூசுப் அலி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் தற்பொழுது தாயகம் திரும்பியுள்ளார்.
அமீரகத்தில், கடந்த 2012 ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சூடானைச் சேர்ந்த சிறுவனைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்ற 45 வயதான நபருக்கு லுலு குழுமத்தின் தலைவரான யூசுப் அலி M.A., சிறுவனின் குடும்பத்திற்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் இழப்பீடு (blood money) செலுத்தி உதவி புரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டு தற்பொழுது வீடு திரும்பியிருக்கிறார்.
இவருக்கு லுலு குழுமம் தற்பொழுது வேலை வழங்கியுள்ளது. யூசுப் அலி இது குறித்து கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் அவருக்கு ஏற்ற வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவர் வேலை செய்ய நினைக்கும் போது, எங்கள் நிறுவனங்கள் ஒன்றில் அவருக்கு வேலை தயாராக இருக்கும். அவரது விருப்பப்படி எங்கள் நிறுவனம் இருக்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை இரவு அபுதாபியில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை கொச்சியை வந்தடைந்துள்ளார்.
கிருஷ்ணன் தெரிவிக்கையில், “இது எனக்கு மறுபிறப்பு. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்கு காரணமாக இருந்த யூசுப் அலி அவர்கள் என் விஷயத்தில் தலையிட்டதிலிருந்து தான், நான் என் வாழ்க்கையில் புது நம்பிக்கையைப் பெற்றேன்” என்று கூறியுள்ளார்.
2012 முதல், கிருஷ்ணனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய பெரும் முயற்சித்துள்ளனர். பின்னர் கிருஷ்ணன் குடும்பத்தினர் யூசுப் அலியை அணுகியிருக்கின்றனர். அவர் வழக்கின் விவரங்களைப் பெற்று அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொண்டார். இறுதியில் 2021 ஜனவரியில், சூடானில் பாதிக்கப்பட்டவரின் குடும்பமானது கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து, அந்த நபரின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ஒரு கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்கினார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டு சொந்த மாநிலமான கேரளாவிற்கு சென்றுள்ளார்.
கிருஷ்ணனின் மனைவி வீணா மற்றும் மகன் அத்வைத் ஆகியோர் கிருஷ்ணனை விமான நிலையம் வரை வந்து வரவேற்றுள்ளனர். இந்த சம்பவமானது பலரையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.