UAE: விசாவிற்கான மருத்துவ பரிசோதனைக்கு PCR டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம்..!! SEHA அறிவிப்பு..!!
அபுதாபியில் புதிய ரெசிடென்ஸ் விசாவிற்கு விண்ணப்பிக்க அல்லது ஏற்கனவே உள்ள விசாவைப் புதுப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் இப்போது தங்கள் மருத்துவ பரிசோதனை (medical test) செய்யப்படுவதற்கு முன்பு எதிர்மறையான PCR சோதனை அறிக்கையை கொண்டு செல்ல வேண்டும் என்று அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) அறிவித்துள்ளது. இந்த புதிய விதியானது ஜூன் 7 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
SEHA- வின் ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து விண்ணப்பதாரர்களும், 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை அறிக்கையை Al Hosn அப்ளிகேஷனில் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
அபுதாபியை குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பொது அலுவலகங்கள், நிகழ்வுகள் மற்றும் பிற பொது பகுதிகளை அணுகுவதற்கு PCR எதிர்மறை சோதனை முடிவை அதிகாரிகள் கட்டாயமாக்கியுள்ளனர்.
அதன்கீழ், தடுப்பூசி போடாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை PCR கட்டாயமாகும்.
சமீபத்திய விதிகளின்படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை முடிவு அல்லது 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை DPI சோதனை முடிவு கட்டாயமாகும்.
அதே போல், சில துறைகளில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக ஹோட்டல், உணவகங்கள், பொழுதுபோக்கு பகுதிகள், சுகாதார ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் இது போன்று வாடிக்கையாளர்களுடன் தினசரி நேரடி தொடர்பில் இருப்பவர்கள் கோவிட் -19 நெறிமுறைகளின் ஒரு பகுதியாக அவ்வப்போது PCR சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், பள்ளி வளாகத்தை அணுக விரும்பும் பெற்றோர் அல்லது பார்வையாளர்கள் PCR சோதனை முடிவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அபுதாபியில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அவ்வப்போது PCR சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.