அமீரகத்தில் அடுத்து வரவிருக்கும் 6 நாட்கள் தொடர் விடுமுறை..!! எப்போது தெரியுமா..??
அமீரகத்தில் கடந்த மாதம் ஈத் அல் பித்ரை முன்னிட்டு ஐந்து நாள் விடுமுறையை குடியிருப்பாளர்கள் பெற்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் வரவிருக்கக் கூடிய ஈத் அல் அத்ஹா எனும் ஹஜ் பெருநாளிற்கு ஆறு நாட்கள் பொது விடுமுறை பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு ஈத் அல் அத்ஹாவின் போது நான்கு நாள் விடுமுறை கிடைக்கும், இதில் அரபா தினமான ஜூலை 19 திங்கள் (துல் ஹஜ் 9) அன்று ஒரு நாள் விடுமுறை கிடைக்கும், அதன்பின்னர் ஜூலை 20 செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 22 வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் ஈத் விடுமுறைகள் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமை என இரு நாட்கள் விடுமுறையையும் சேர்த்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆறு நாள் விடுமுறை கிடைக்கும் வாயப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆறு நாள் விடுமுறையே அமீரகத்தில் இந்த ஆண்டில் வழங்கப்படும் நீண்ட விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டு ஐந்து முறை நீண்ட விடுமுறையினைப் பெறுவார்கள்.
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மே 11 முதல் மே 15 வரை ஈத் அல் பித்ரின் போது ஐந்து நாள் விடுமுறையை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து வரும் ஈத் அல் அத்ஹா விடுமுறைக்குப் பின்னர், அடுத்த நீண்ட விடுமுறை ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய புத்தாண்டுக்கு கிடைக்கப்படும்.
பின்னர் மீண்டும் அக்டோபரில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக்கு கொடுக்கப்படும்.
கடைசி நீண்ட விடுமுறையானது டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் மற்றும் தியாகிகள் நினைவு தினத்திற்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.