ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை உலகின் சிறந்த விமான நிறுவனங்கள் என ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு நிறுவனமான ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் (Airlineratings.com) மதிப்பிட்டுள்ளன.
துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் அதன் சமீபத்திய மதிப்பீட்டில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
“எமிரேட்ஸ் உலகின் மிகச்சிறந்த விமானங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது மற்றும் இந்த நிறுவனம் ஒரு பிரீமியம் எகனாமிக் கிளாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொழில்துறையில் மிகச் சிறந்த ஒன்றாக புகழப்படுகிறது” என்று ஏர்லைன்ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
“எமிரேட்ஸ் இப்போது ஏறக்குறைய 120 இடங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இது கொரோனாவிற்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட சமமாக உள்ளது என்று எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அடெல் அல் ரெட்ஹா சமீபத்திய மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ் 20 வது இடத்தைப் பிடித்துள்ளது. எதிஹாட் சமீபத்தில் வியன்னாவிற்கு விமான சேவையை இயக்குகிறது. இதன் மூலம் எதிஹாட் விமான சேவைகளை இயக்கும் இடங்களானது 54 வது இடமாக உயர்ந்துள்ளது.
எதிஹாட் விமான நிறுவனமே தனது ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்ட முதல் விமான நிறுவனமாகும்.
மேலும் கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகச்சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த விமான நிறுவனம் அதன் புதிய கண்டுபிடிப்புகள், கொரோனா தொற்றுநோயின் போது உலகளாவிய பயணிகளுக்கான அர்ப்பணிப்பு, செயல்பாட்டு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தலைமை ஆகியவற்றால் பாராட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், குவாண்டாஸ் (Qantas), எமிரேட்ஸ், கேத்தே பசிபிக், விர்ஜின் அட்லாண்டிக், யுனைடெட் ஏர்லைன்ஸ், EVA ஏர், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா, ANA, ஃபின்னேர், ஜப்பான் ஏர் லைன்ஸ், KLM, ஹவாய் ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ், விர்ஜின் ஆஸ்திரேலியா, டெல்டா ஏர் லைன்ஸ் மற்றும் எட்டிஹாட் ஏர்வேஸ் ஆகியவை சிறந்த விமான நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.