ADVERTISEMENT

அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விசாக்கள்..!! 15 வயதிற்கு மேற்பட்டோரும் வேலை செய்ய அனுமதி..!!

Published: 6 Sep 2021, 5:17 AM |
Updated: 6 Sep 2021, 5:30 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, “கிரீன் விசா (Green Visa)” எனும் ஒரு புதிய குடியுரிமை விசா பிரிவையும், “ஃப்ரீலான்ஸ் விசா (Freelance Visa)” எனும் மற்றொரு வகை விசா பிரிவையும், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் நிறுவனங்களில் பணி புரிய அனுமதிக்கும் வகையிலான தற்காலிக விசாவையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமீரக அரசு அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் இந்த வருடம் தனது 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூறுவதை தொடர்ந்தும், மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின்  வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, ஆரம்பிக்கும் அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டங்களின் முதல் தொகுதி பற்றிய தொடர் அறிவிப்புகளை அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி அல் சியோடி நேற்று வெளியிடும்போது இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசாக்களை பற்றி அவர் மேலும் கூறும்போது, “கிரீன் விசா” பெற தகுதியான வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகளை ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் கிரீன் விசா பெற்ற நபர் தனது மகனிற்கு 25 வயது வரையும் ஸ்பான்சர் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அமீரகத்தில் தற்போது ரெசிடென்ஸ் விசா மூலம் ஒரு தந்தை தனது மகனிற்கு 18 வயது வரை மட்டுமே ஸ்பான்சர் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் இந்த கிரீன் விசாவானது அதிக திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், மற்றும் நிறுவனங்களின் பணி அனுமதிகளுடன் இணைக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கிரீன் விசா வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் விசா காலம் முடிந்தவுடன் அமீரகத்தை விட்டு வெளியேற 90 முதல் 80 நாட்கள் வரை சலுகைக் காலம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ரெசிடென்ஸ் விசா கொண்ட குடியிருப்பாளர்களுக்கு விசா முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற 30 நாள் மட்டுமே சலுகை காலம் அளிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT

அதே போன்று, நாட்டிற்கு சிறப்பு திறமை கொண்ட வெளிநாட்டவர்களை ஈர்ப்பதற்காக ‘ஃப்ரீலான்ஸ் விசா’ எனப்படும் மற்றொரு வகை விசா தொடங்கப்படுவதாகவும் அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த விசாவானது துறை சார்ந்த நிபுணர்கள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் சிறப்புத்தன்மை கொண்ட நபர்களை முக்கிய துறைகளுக்கு ஈர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அல் சியோடி விளக்கியுள்ளார். மேலும் சுயாதீன வணிகங்களின் உரிமையாளர்களுக்கு அல்லது சுயதொழில் செய்யும் நபர்களுக்கு ஃப்ரீலான்ஸ் விசா வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள தற்காலிக விசா திட்டத்தின் கீழ் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாணவர்களுக்கான இந்த புதிய விதிமுறை அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்ப்பதுடன், மாணவர்களுக்கும் ​​சில அனுபவங்களைப் பெற அனுமதிக்கும் எனவும் டாக்டர் தானி அல் சியோடி கூறியுள்ளார்.

எனினும், இந்த புதிய விசாக்களின் செல்லுபடி காலம், கிரீன் விசா பெற தகுதியான முதலீடு அல்லது சம்பளத் தேவைகள் உள்ளிட்ட விபரங்கள் ஏதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.