அமீரக செய்திகள்

துபாய்: இன்று முதல் கோலாகலமாக தொடங்கும் ‘குளோபல் வில்லேஜ்’..!! பார்வையாளர்களை வரவேற்க தயார் நிலையில் ஏற்பாட்டாளர்கள்..!!

உலகளவில் பொதுமக்களை அதிகம் ஈர்க்கும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜின் 26 சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

துபாயில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால சீசனில் தொடங்கப்படும் குளோபல் வில்லேஜின் இந்த ஆண்டிற்கான சீசன் அக்டோபர் 26 முதல் தொடங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த சீசனில் பல புத்தம் புதிய அம்சங்களை ஏற்பாட்டாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் வித்தியாசியமான கட்டிட அமைப்பு, மாற்றியமைக்கப்பட்ட நடைபாதைகள் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிப்புற பன்முக கலாச்சார இடத்தின் 26 வது சீசனிற்கு பார்வையாளர்களை வரவேற்க தயார் செய்யப்பட்டுள்ளன.

அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் உலகளவிலிருந்து வரும் பார்வையாளர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை பெற்ற இந்த ஆண்டிற்கான 26 வது சீசன், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து 26 பெவிலியன்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களைக் கொண்டிருக்கும் என்பதும், இது 80 நாடுகளின் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளோபல் வில்லேஜின் விருந்தினர் பிரிவின் மூத்த மேலாளர் முஹன்னத் இஷாக் கூறுகையில், “இந்த சீசனின் உள்கட்டமைப்பு மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, நாங்கள் அதிக இருக்கை பகுதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், விருந்தினர்களின் நடமாட்டத்தை மேம்படுத்த சில நடைபாதைகளை சரிசெய்துள்ளோம், எங்கள் முக்கிய ஸ்டேஜின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குளோபல் வில்லேஜ் சீசனில், பார்வையாளர்கள் புதிய உணவுகள், நேரலை பொழுதுபோக்கு மற்றும் தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு குளோபல் வில்லேஜ் தனது 25வது சீசனை கொண்டாடியிருந்தது. 25 வது ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக 25 கின்னஸ் உலக சாதனைகளை துபாயின் குளோபல் வில்லேஜ் முறியடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வரையிலும் பார்வையாளர் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக 15 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆன்லைன் டிக்கெட் விலை மட்டும் 15 திர்ஹம் ஆகவும், குளோபல் வில்லேஜ் நுழைவாயிலில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் விலை 20 திர்ஹம் ஆகவும் இருக்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!