குற்றங்களை தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உயர்ந்த பாதுகாப்பை வழங்குவதற்கும் புத்தம் புதிய செயற்கை நுண்ணறிவுடன் இயங்க கூடிய ஓட்டுநர் இல்லா தானியங்கி ரோந்து வாகனங்களை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் சாத்தியமான குற்றங்களை கண்காணிப்பதற்கான ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய தானியங்கி ரோந்து வாகனங்கள் விரைவில் துபாய் காவல்துறையில் இணையவுள்ளது.
துபாய் காவல்துறையின் ரோந்து படையில் இணையவுள்ள இந்த தானியங்கி ரோந்து வாகனங்கள், துபாயில் நடக்கும் குற்றத்தை கண்காணித்து காவல்துறை செயல்பாட்டு மையத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு அது குறித்த தகவல்களை வழங்கும் சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது.
எக்ஸ்போ 2020 துபாயில் கடந்த திங்கள்கிழமை நடந்த உலக காவல்துறை உச்சி மாநாட்டின் தொடக்க நாளில் இந்த அதிநவீன ரோந்து வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. துபாய் காவல்துறையில் இணையவுள்ள இந்த தானியங்கி ரோந்து வாகனங்கள் இரண்டு வெவ்வேறான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து துபாயின் நிர்வாக விவகாரங்கள் துறை இயக்குனர் கர்னல் மன்சூர் அல் கர்காவி அவர்கள் விவரிக்கையில், “தானியங்கி ரோந்து வாகனங்களில் இரண்டு பதிப்புகள் உள்ளன, அதில் M01 என்று அழைக்கப்படும் ரோந்து வாகனம் அனைத்து சாலைகளையும் எளிதாக அணுகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றும் M02 என்று அழைக்கப்படும் மற்றொரு ரோந்து வாகனம் குறுகிய சாலைகள் மற்றும் அடர்த்தியான குடியிருப்பு சுற்றுப்புறங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் “இந்த தானியங்கி ரோந்து வாகனங்கள் குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது அதைச் சுற்றி நடக்கும் விபத்துகளின் விபரங்களை தானாகவே கற்றுக்கொள்ளும் விதத்தில் இயந்திர கற்றல் அம்சம் கொண்ட ஒரு எலக்ட்ரிக் மோட்டார் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செக்யூரிட்டி கேமராக்கள், 4டி இமேஜின் ரேடார்கள், தரவு பகுப்பாய்வு மற்றும் முகத்தை அடையாளம் காணும் அம்சங்கள் போன்ற உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த M01 மற்றும் M02 எனும் அதிநவீன தானியங்கி ரோந்து வாகனங்களை தயாரிக்கும் பணியில் 2018 ஆம் ஆண்டு முதலே துபாய் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ரோந்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தவிர துபாய் காவல்துறையில் இணையவிருக்கும் வடிவமைப்பில் மிகப்பெரிய மற்றொரு 4×4 ரோந்து வாகனமான “தி கியாத் (the Ghiath)” ரோந்து வாகனமும் உலக காவல்துறை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. துபாயின் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அவர்களால் ‘கியாத்’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரோந்து வாகனம் அமீரகத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், தொடுதிரைகளின் தொகுப்பு, எட்டு கேமராக்கள் மற்றும் கமாண்ட் ஆபரேஷன் அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்பு போன்ற அம்சங்களை இந்த பாதுகாப்பு ரோந்து கார் கொண்டுள்ளது. இந்த வாகனத்தை துபாயில் இயங்கும் சேஃப் சிட்டி குழுமம் நிறுவனமானது W மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
