அமீரக செய்திகள்

துபாய்: அன்னையர் தினத்தில் மறைந்த தாய்க்கு துபாய் ஆட்சியாளர் எழுதிய உருக்கமான கவிதை..!!

ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது அவர்கள், தனது மறைந்த தாயார் ஷேக்கா லதிஃபா பின்த் ஹம்தான் பின் சையத் அல் நஹ்யானுக்கு மனதைக் கவரும் வகையில் கவிதை ஒன்றை எழுதி தனது தாய்க்கு அன்னையர் தினத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த தாயின் மீது பேரன்பு கொண்டிருக்கும் துபாய் ஆட்சியாளரின் இந்த கவிதையை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது தாயை இழந்து வாடுவதாக அவர் பதிவிட்ட கவிதையில் கூறும் ஷேக் முஹமம்து அவர்கள், “எனது தாய் மிகவும் அழகானவர், மென்மையானவர், எனக்கு மிகவும் நெருக்கமானவர், குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் முகத்தில் காணப்படும் அமைதியைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் என் அம்மா அமைதியின் உருவமாகவே இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரின் கவிதையில் “எல்லா குழந்தைகளையும் போலவே, நான் அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று கருதினேன். தாய்மார்களைப் பற்றிய ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு குழந்தையும் தாய் தன்னை மட்டுமே மிகவும் விரும்புவதாக நினைக்கிறது” என்று தனது குழந்தை பருவத்தினை நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் தனது தாயை பற்றி கூறுகையில் “அவர் வயதாகிவிட்டதால், நான் அவரை மகிழ்ச்சியடையச் செய்ய ஆர்வமாக இருந்தேன். நான் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பும் போதெல்லாம் அவருக்காக ஒரு பரிசைக் கொண்டு வருவேன்” என்றும் தாயின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தன் தாயை இழந்தபோது ஷேக் முஹம்மது அவர்கள் உணர்ந்த வேதனையையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதில், “மே 1983 இல், நான் என் தாயை இழந்தேன், என் நேசமான தாயை, என் கண்களை இழந்தேன், என் தந்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பகிர்ந்து கொண்ட தனது வாழ்க்கை துணையையும், அவரது அன்பையும், தனது நண்பரையும் இழந்தார். என் தந்தை ஒரு போதும் பிரியாத என் தாயை இழந்தார்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தாயை அடக்கம் செய்த தருணம் குறித்து கூறுகையில் “அது ஒரு பெரிய இறுதி ஊர்வலம், துபாயின் தாயை இழந்ததற்காக ஆயிரக்கணக்கானோர் வருந்தினர். எனது தாயின் உடலை கல்லறையில் இறக்கியபோது, ​​நானும் கீழே இறங்கினேன். நிற்க மறுத்த கண்ணீருடன் அவரிடம் விடைபெற்றேன்” என்று தனது தாயை இழந்த அந்த சோகமான நாட்களை அன்னையர் தினத்தில் மாண்புமிகு ஷேக் முஹம்மது அவர்கள் நினைவு கூர்ந்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!