அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி மாத இறுதியில் தளர்த்தியது. அமீரக அரசின் அறிவிப்பையடுத்து துபாய், அபுதாபி போன்ற எமிரேட்டுகள் தங்கள் எமிரேட்களில் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டன.
இதில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அபுதாபியில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த விபரங்கள் அனைத்தும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
முக கவசம்
அபுதாபியில் மக்கள் இனி வெளிப்புற இடங்களில் முக கவசம் அணிய வேண்டியதில்லை. இருப்பினும், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற அனைத்து பொது உட்புற பகுதிகளிலும் முக கவசங்களை அணிய வேண்டும். அத்துடன் சமூக விலகல் குறித்த விதிமுறைகளும் தொடர்ந்து அமலில் உள்ளன.
தனிமைப்படுத்தல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. அதற்கு மாறாக அவர் இப்போது எந்த நேரத்திலும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறலாம். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு PCR சோதனைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
கண்காணிப்பு சாதனம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ட்ராக்கிங் பேண்டுகளை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் போது இனி பயன்படுத்த தேவையில்லை. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 10 நாட்கள் காத்திருக்கலாம்.
10 நாட்களுக்கு பின்னர் அல் ஹோஸ்ன் தானாகவே பச்சை நிறத்திற்கு மாறும் அல்லது அவர்கள் குறைந்தது 24 மணிநேர இடைவெளியில் இரண்டு எதிர்மறை PCR சோதனை முடிவினைப் பெறவதால் கிரீன் பாஸ் பெறலாம். அல் ஹோஸ்ன் பாஸ் மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறியதும், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம்.
பள்ளிகள்
பள்ளிகளில் முக கவசம் தற்போதைக்கு உள்ளேயும் வெளியேயும் அணிய வேண்டும். அதேநேரம் இனி கொரோனா நோயாளிகளின் நெருங்கிய தொடர்பில் இருந்த மாணவர்கள் அறிகுறிகள் இல்லாத வரை இப்போது நேரில் பள்ளிக்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் முதல் நாள் மற்றும் நான்காவது நாளில் ஒரு சோதனை எடுக்க வேண்டும்.
வைரஸால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சமீபத்திய அரசாங்க அறிவிப்பின்படி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்களில் நுழைவு
அபுதாபியில் உள்ள பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைய அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ் கட்டாயமாக உள்ளது. டிசம்பர் தொடக்கத்தில் கிரீன் பாஸின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களில் இருந்து 14 ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் கிரீன் பாஸை தக்க வைத்துக்கொள்ள 14 நாட்களுக்கு ஒரு முறை PCR மேற்கொள்ள வேண்டும்.
எல்லை கட்டுப்பாடுகள் நீக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
துபாய் எல்லையில் இருந்து அபுதாபிக்குள் நுழைய மக்கள் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸை காட்ட வேண்டியதில்லை. மேலும் EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்படவும் மாட்டாது.
பயணம்
அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் இனி PCR பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. மேலும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விமானங்களில் ஏறுவதற்கு முன் எதிர்மறையான PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க தேவையில்லை.
இதற்கு முன்பு அனைத்து பயணிகளிடமிருந்தும் எதிர்மறை சோதனை முடிவு பெறப்பட்ட பின்னரே விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
அத்துடன் அமீரகத்திற்கு பயணிக்கும் தடுப்பூசி போடப்படாத பயணிகள், அவர்கள் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவைத் தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அவர்கள் விமானத்தில் 30 நாட்களுக்குள் பெறப்பட்ட கொரோனா பாதித்து மீண்டதற்கான சான்றிதழைக் காட்ட வேண்டும்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும்அபுதாபி அரசானது கொரோனா தொற்று குறைவு, அதிகம் உள்ள நாடுகள் என வகைப்படுத்தாமல் அந்த பட்டியல் முறையை நீக்கியது மற்றும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை நீக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.