அமீரக அதிபருக்கு கடிதம் எழுதிய பிரதமா் மோடி.. எது குறித்து தெரியுமா.?

அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்த உறுதி ஏற்பதாகக் கூறியுள்ளாா். அமீரகம் – இந்தியா கூட்டுக் குழுவின் 14-ஆவது கூட்டம் துபாயில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்துகொண்டாா். அதிபா் சயீத் அல் நஹ்யானை வெள்ளிக்கிழமை சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா், பிரதமா் மோடி எழுதிய கடிதத்தை ஒப்படைத்தாா்.
இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக அந்தக் கடிதத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளதாக அமீரகத்தின் அதிகாரபூா்வ செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையே கையொழுத்தாகி உள்ள விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவது தொடா்பாகவும் அக்கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது. மேலும் நலன் சாா்ந்த பல்வேறு பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு அமீரகம் இந்தியாவின் 3-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக உள்ளது. இந்தியப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகும் நாடுகளில் அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமீரகத்தில் சுமாா் 34 லட்சம் இந்தியா்கள் வசிக்கின்றனா். இது அந்நாட்டு மக்கள்தொகையில் சுமாா் 35 சதவீதம் ஆகும்.