தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றொரு வாரத்திற்கு கடுமையான கோடை வெப்பத்தை எதிர்கொள்ளவுள்ளது. அந்தவகையில், இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாட்டின் சில உட்புறப் பகுதிகளில் வெப்பநிலை 48°C வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பிற்பகுதியில் வீசும் பலத்த காற்றினால் தூசி கலந்த சூழல் உருவாகி, நாட்டின் சில பகுதிகளில் பார்வைத்திறன் (visibility) குறையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் வானிலை தொடர்பாக நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள தகவலின்படி, திங்கட்கிழமை பெரும்பாலும் வெயில் மற்றும் வெப்பமான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நாட்டின் கிழக்குப்பகுதிகளில் மட்டும் சில தாழ்வான மேகங்கள் தென்படலாம். இதனிடையே, உட்புறப் பகுதிகளில் வெப்பநிலை 43°C முதல் 48°C வரையிலும், கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் 36°C முதல் 42°C வரையிலும் இருக்கக்கூடும். மலைப்பாங்கான பகுதிகள் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக இருந்து, அதிகபட்சமாக 37°C வரை வெப்பநிலை பதிவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், அப்போது தென்மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளிலிருந்து பலத்த காற்று நாடு முழுவதும் வீசும் என்றும் NCM அறிவித்துள்ளது. இந்தக் காற்றினால் திறந்தவெளிகளில் தூசியும் மணலும் கிளம்பக்கூடும், இதனால் மங்கலான சூழல் உருவாகி சில சாலைகளில் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம் என்று அந்த மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, தூசி கலந்த வானிலையானது புதன்கிழமை வரையிலும் நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் அதிகரிக்கலாம். காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ வரை எட்டக்கூடும்.
மேலும், அரேபிய வளைகுடாப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படலாம், பின்னர் படிப்படியாக நிலைமை சீரடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை சீரடைந்து நல்ல வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், குறிப்பாக மேற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால், மூடுபனி உருவாவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நாளுக்குநாள் கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், மதிய வேளைகளில் நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், தூசி மற்றும் குறைந்த பார்வைத்திறன் கொண்ட பகுதிகளில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel