UAE: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் தீப்பிடித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.. பயணிகள் பத்திரமாக தரையிறக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜினில் திடீரென தீப்பிடித்ததால், உடனடியாக அந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜினில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீர் என்று தீப்பிடித்ததாகவும், இதனால் அந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியதாகவும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இன்று பிப்ரவரி 3, 2022 வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவிக்கையில், அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட இந்த விமானத்தில் 184 பயணிகள் இருந்ததாகவும், இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும் இது குறித்து விவரிக்கையில், விமானம் புறப்பட்டு 1,000 அடி உயரத்திற்கு ஏறிய பிறகு, விமானத்தின் ஒரு இன்ஜினில் தீப்பிடித்ததை விமானி கண்டறிந்ததாகவும், உடனே அவர் மீண்டும் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்ப முடிவு செய்தார் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 என்ற இந்த விமானத்தில் நடுவானில் தீப்பிடித்த சம்பவத்தை தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.