UAE: இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் நீண்ட தொடர் விடுமுறை.. அதிகரிக்கும் விமான கட்டணம்.. பயணிகளின் கவனத்திற்கு..!!

2023ம் ஆண்டு தொடங்கி அதற்குள்ளாகவே ஜனவரி மாதம் முடிந்து தற்பொழுது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் முடியவுள்ளது. ரமலான் மாதம் துவங்க இன்னும் சில வாரங்களே இருப்பதனால் அமீரகத்தில் முதல் நீண்ட தொடர் விடுமுறையான ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அமீரக அரசு வெளியிட்டுள்ள 2023 ம் ஆண்டின் விடுமுறை பட்டியலின்படி இந்த தொடர் விடுமுறையானது 4 நாட்கள் வரை இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களில் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு பயண முகவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
ரமலான் மாத இறுதியில் வரும் இந்த ஈத் அல் ஃபித்ர் தொடர் விடுமுறையில் நான்கு நாட்கள் கிடைக்கும் என்பதால் அமீரகத்தில் இருக்கும் குடியிருப்பாளர்கள் பலரும் இந்த நாட்களில் சொந்த ஊருக்கு செல்லவோ, வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லவோ திட்டமிட்டு அதன்படி தங்களது பயணங்களை அமைத்துக் கொள்வார்கள்.
இதன் காரணமாக அடுத்த மாதம் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களில் விமான கட்டணங்கள் பெருமளவு உயரும் என பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கால கட்டத்தில் பயணம் மேற்கொள்ள இருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே தங்களின் பயணங்களை திட்டமிடவும் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யுமாறும் பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமீரகத்தைப் பொறுத்தவரை இவ்வாறான நீண்ட விடுமுறை நாட்களில் பெரும்பாலானோர் குறுகிய கால விடுமுறையாக தங்களின் சொந்த நாடுகளுக்குச் சென்று விட்டு வருவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது தவிர ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என்பதால் இன்னும் சில குடியிருப்பாளர்கள் குடும்பமாக வேறு சில நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவார்கள் என்பதும் வழமையாகும். எனவே இந்த குறிப்பிட்ட நாட்களின் போது விமான பயண டிக்கெட்டின் விலையானது சாதாரண நாட்களில் இருப்பதை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான விமான கட்டண திடீர் உயர்வை தவிர்ப்பதற்கு இப்போதே தங்களின் பயண டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளவும் பயண முகவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, இது ஏப்ரல் 20 வியாழன் முதல் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தேதியானது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர்த்து மேலும் வேறு 3 நீண்ட தொடர் விடுமுறை நாட்களை இந்தாண்டு அமீரக குடியிருப்பாளர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவை:
நீண்ட விடுமுறை நாட்கள்
அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதா:
இது பெரும்பாலும் ஆறு நாட்கள் விடுமுறையை வழங்கும். வானியல் கணக்கீடுகளின் படி ஜூன் 27 செவ்வாய்க் கிழமை முதல் ஜூன் 30 வெள்ளி வரை விடுமுறை இருக்கும். இது உண்மையாக இருந்தால், சனி-ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு ஆறு நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய புத்தாண்டு:
இது ஜூலை 21 வெள்ளிக்கிழமை அன்று வரவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதை உறுதி செய்யும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்:
செப்டம்பர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த நாள் வருவதால் இந்த விடுமுறையும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ள குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு மூன்று நாள் தொடர் விடுமுறையை கிடைக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.