ஜூன் மாதம் முதல் தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை அளிக்க ஓமான் தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு!! விதியை மீறும் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்..!!

ஓமானில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கட்டுமானத் தளங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் வேலை செய்வதற்குத் தடை விதித்து தொழிலாளர்களுக்கான மதிய இடைவேளையை தொழிலாளர் அமைச்சகம் (MoL) அறிவித்துள்ளது.
குறிப்பாக, திறந்தவெளிப் பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை கடுமையான கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 16-3 இன் படி, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மதியம் அதிக வெப்பநிலையில் தொழிலாளர்கள் கட்டுமான தளங்களில் அல்லது திறந்த பகுதிகளில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்கள் மதிய இடைவேளையை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக பணியிடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, தடையை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனங்கள் அமைச்சகத்தின் விதியைக் கடைபிடிக்குமாறும், தடையை மீறினால் RO100 முதல் RO500 வரை அபராதம் அல்லது சில சந்தர்ப்பங்களில் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. மீண்டும் மீண்டும் தடையை மீறினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.