Flydubai-ல் நூற்றுக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!! – ஆன்லைன் வழியாக நேர்காணல் நடத்தப்படலாம் என்று தகவல்…

துபாயை தளமாகக் கொண்ட ஃபிளைதுபாய் (flydubai) விமான நிறுவனம், அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு 1,000 ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்து flydubai இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த ஆண்டு மொத்தம் 1,120 புதிய பணியாளர்கள் பணியில் சேருவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாயிலிருத்து மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் 110 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்கும் ஃபிளைதுபாய் விமான நிறுவனம், பயணிகள் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கக் தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறைகளில் அதன் பணியாளர்களை பலப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் கேரியரில் காலியாக உள்ள பணியிடங்களைப் பொறுத்து, ஆன்லைனில் நேர்காணல்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 320 ஊழியர்களை பணியமர்த்தியுள்ள flydubai கேரியர் 2023 இறுதிக்குள் வணிகம் முழுவதும் பல்வேறு பதவிகளுக்கு 800 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்தும் என்றும் கூறப்படுகிறது. இதில் விமானிகள், கேபின் குழுவினர், பொறியாளர்கள் மற்றும் அலுவலகம்- அடிப்படையிலான ஊழியர்கள் போன்ற வேலைகளும் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது கடந்த ஆண்டை விட விமானத்தின் பணியாளர்கள் 24 சதவீதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 5,774 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 136 நாட்டினர் இந்த கேரியரில் பணிபுரிவதாகவும், தற்போதுள்ள 4,918 பணியாளர்களில் 36 சதவீத பெண் ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 3.37 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை Flydubai கேரியர் ஏற்றிச் சென்றுள்ளது, இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 50 சதவீதம் அதிகமாகும். இந்த அதிவேக அதிகரிப்பைத் தொடர்ந்து, கோடை பயணத்திற்காக எதிர்வரும் ஜூலை 1 மற்றும் செப்டம்பர் 30க்கு இடைப்பட்ட காலங்களில் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்ல கேரியர் அதன் திறனை 20 சதவீதம் அதிகரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.