அமீரக செய்திகள்

அரபிக்கடலில் தீவிரமடையும் புயல்..!! அமீரகத்தை தாக்கினால் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்..!!

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அரேபிய கடலில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல சூறாவளியானது (tropical cyclone) ஒருவேளை அமீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்று வானிலை மற்றும் வெப்பமண்டல நிலைமைகள் கூட்டு மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்குமானால் அரேபியன் கடலில் உருவாகும் சூறாவளியின் தாக்கத்தைச் சமாளிக்க நாட்டின் தயார் நிலையை உறுதி செய்வதற்காக, நாட்டின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Emergency Crisis and Disaster Management Authority NCEMA) இந்த கூட்டத்தை நடத்தியுள்ளது.

அமீரகத்தின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் மற்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், கடற்பரப்பில் வெப்பமண்டல நிலையின் சாத்தியமான விளைவுகளை மதிப்பீடு செய்த பிறகு முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்துறை அமைச்சகம் (MoI) இதுபோன்ற இயற்கை சீற்றங்களின் போது, பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது அதன் முதன்மையான முன்னுரிமை என்று கூறியுள்ளது. மேலும், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சூறாவளி குறித்து போலியான தகவல்களை வெளியிடவோ அல்லது வதந்திகளை பரப்பவோ வேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று ‘Biparjoy’ என்றழைக்கப்படும் வலுவான சூறாவளி புயலை வகை 1 என்று NCM வகைப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த வலுவான சூறாவளியினால் அடுத்த ஐந்து நாட்களில் அமீரகம் பாதிக்கப்படாது என்றும் கூறியுள்ளது. மேலும், சூறாவளியின் மையத்தைச் சுற்றி காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கிமீ வரை இருக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைச் சுற்றிலும் மழையுடன் கூடிய வெப்பச்சலன மேகங்கள் இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கு முன்பு அரபிக்கடலில் வலுப்பெற்ற சூறாவளிகள் ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதித்துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டில், ஷஹீன் சூறாவளி பிராந்தியத்தைத் தாக்கியதால், அமீரகத்தில் உள்ள சில பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதும், கடந்த 2019 ஆம் ஆண்டில், கியார் சூறாவளி ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அரபிக்கடலை ஒட்டியுள்ள மற்றொரு நாடான ஓமானிலும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் கடற்கரையிலிருந்து 1,050 கிமீ தொலைவில் புயலின் மையம் நிலை கொண்டிருப்பதாகவும், மழை மேகங்கள் 550 கிமீ தொலைவில் இருப்பதாகவும் ஓமான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சூறாவளி நாட்டில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஓமானில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!