அமீரக செய்திகள்

துபாயில் காலாவதியான விசாவில் தங்கியிருப்பவர்களை கண்டறிய AI மூலம் இயங்கும் புதிய வாகனம் அறிமுகம்..!!

உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களில் துபாயும் ஒன்றாகும். துபாயில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கிரிமினல்கள், விசா விதிமீறல் புரிந்தவர்கள் பற்றி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்ய புதிய AI- இயங்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் பாதுகாப்பு இன்னும் சிறந்து விளங்கும் என கூறப்படுகின்றது.

இந்த வாகனம், நகரின் பல்வேறு சமூக பகுதிகளுக்குச் சென்று, காவல்துறையினரால் தேடப்படும் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் எந்தவொரு நபரைப் பற்றியும் மற்றும் நம்பர் பிளேட் ஸ்கேனிங் மூலம் பதிவு செய்யப்படாத கார்களைப் பற்றியும் அதிகாரிகளை எச்சரிப்பதுடன் காலாவதியான விசாவில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களையும் பிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த வாகனம் தற்போது, துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் நடந்து வரும் துபாய் ஏர்ஷோ 2023 இல் துபாய் போலீஸ் ஸ்டாண்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானக் கண்காட்சி நவம்பர் 17, 2023 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

குறிப்பாக, கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பது இந்த வாகனத்தின் முக்கிய செயல்பாடுகள் ஆகும். இது 360 டிகிரி கேமரா காட்சியுடன் முகம் மற்றும் கார் நம்பர் பிளேட் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் இதில் மோஷன் டிடெக்டரும் (motion detector) பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காவல்துறை வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த AI- வாகனங்கள் சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையினரை எச்சரிக்கும் என்றும் துபாய் போலீஸ் ஸ்டாண்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Micropolis Robotics உடன் இணைந்து அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம் 16 மணி நேரம் வரை செயல்படும் என்றும், MO2 என்றழைக்கப்படும் இந்த வாகனங்களை நிலைநிறுத்துவதற்கான சரியான இடங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் விவரித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!