அபுதாபியின் ஷேக் சையத் ஃபெஸ்டிவலுக்கு செல்ல இலவச பஸ் சேவை..!! ITC வெளியிட்டுள்ள அறிவிப்பு….
அபுதாபியின் அல் வத்பா பகுதியில் பிரபலமான ஷேக் சையத் ஃபெஸ்டிவல் இன்று கோலாகலாமாகத் தொடங்கியுள்ளது. சுமார் 114 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச பொது போக்குவரத்து பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பதிப்பில், வானவேடிக்கை நிகழ்சிகள், உணவுக் கடைகள், விளையாட்டு நடவடிக்கைகள் என பல ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாபெரும் திருவிழா வார நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 1 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ITC வெளியிட்ட அறிவிப்பின்படி, அபுதாபி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு இலவச பேருந்து புறப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த பேருந்து வழித்தடம் அபுதாபி சிட்டியில் உள்ள சென்ட்ரல் பஸ் ஸ்டேஷனில் தொடங்கி, ராப்தானில் உள்ள கூட்டுறவு சங்க சூப்பர் மார்க்கெட் (Co-operative Society Supermarket), பனியாஸ் கோர்ட் பார்க்கிங் இடம் வழியாகச் சென்று இறுதியாக அல் வத்பா பகுதியில் ஃபெஸ்டிவல் நடைபெறும் இடம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
இந்த சேவை திங்கள் முதல் வியாழன் வரை சென்ட்ரல் பஸ் ஸ்டேஷனில் இருந்து மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், திருவிழா நடைபெறும் இடத்திலிருந்து மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளி முதல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில், பயணங்கள் மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை இயங்கும், மற்றும் திரும்பும் சேவை மாலை 4.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவில் முடிவடையும்.
பார்வையாளர்கள் ஃபெஸ்டிவலின் முதல் நாளான இன்று, இரவு 10 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10 மணிக்கு பட்டாசுகள் வானில் ஒளிரும்.
கூடுதலாக, பேருந்து சேவையின் நேர அட்டவணையைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், https://www.itc.gov.ae/ ஐப் பார்வையிடவும் அல்லது 800850 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மாறாக, ‘Darbi’ ஆப் அல்லது கூகுள் மேப்ஸையும் நீங்கள் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel