அமீரக செய்திகள்

UAE: நாணயத்தை விழுங்கிய சக மாணவரை காப்பாற்றிய பள்ளி மாணவர்!! மாணவரின் விவேகமான செயலுக்கு ஷார்ஜா காவல்துறை அங்கீகாரம்….

ஷார்ஜாவில் உள்ள பள்ளியில் தற்செயலாக நாணயத்தை விழுங்கிய சக மாணவரின் உயிரைக் காப்பாற்றிய அலி முகமது பின் ஹரிப் அல் முஹைரி என்ற மாணவர் ஷார்ஜா காவல்துறையினரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் துணிச்சலுடன் விரைந்து நடவடிக்கை எடுத்த மாணவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

பொதுவாக, சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு சாதகமாக பங்களிக்கும் அனைத்து தரப்பு நபர்களும் ஷார்ஜா காவல்துறையால் அங்கீகரிக்கப்படுவார்கள். அந்தவகையில், அல் முஹைரியின் புத்திசாலித்தனமான நடவடிக்கையைக் கொண்டாடும் வகையில், மேஜர் ஜெனரல் அலுவலகத்தில் அங்கீகாரம் வழங்கும் விழா நடத்தப்பட்டது.

அப்போது, ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி அவர்கள், மாணவரின் விவேகமான செயல்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார். அதேபோல், பள்ளி நிர்வாகமும் அந்த மாணவரை கௌரவித்துள்ளது.

நடந்தது என்ன?

ஷார்ஜாவின் அல் ஹம்ரியா பகுதியில் உள்ள அல் கலியா ஆரம்பப் பள்ளியில் கடந்த வாரம் காலை 10 மணிக்கு இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் அலியின் தந்தை பேசுகையில், 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நாணயத்தை விழுங்கியதால் மூச்சி விட சிரமப்பட்டிருக்கிறார். அதைப் பார்த்த அலி, விரைவாக மாணவரின் அருகில் சென்று அவரது வயிற்றை அழுத்தத் தொடங்கியதாகவும், இதனால் அந்த மாணவருக்கு இருமல் ஏற்பட்டு சிக்கிய நாணயத்தை வெளியே எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அலி இது பற்றி தெரிவிக்கையில், “இது எனது முதல் அனுபவம் மற்றும் எனது வகுப்புத் தோழரின் உயிரைக் காப்பாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இன்று முதல் என் பெயர் ‘little savior’” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மாணவர் அலியின் தந்தை ஹம்ரியா முனிசிபாலிட்டியில் பொது சுகாதாரத் துறைக்கு தலைமை தாங்குகிறார். இவர் தனது அனைத்து குழந்தைகளுக்கும் முதலுதவி படிப்புகளை கற்றுக் கொடுத்துள்ளார். எனவே, அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு முதலுதவி கற்பிக்குமாறும் அது அவர்களுக்கு வாழ்க்கையில் பயனளிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பெற்றோர்களிடையே சமூகப் பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மாணவரின் தந்தை, தனது மகனின் துணிச்சலான செயலை அங்கீகரித்த ஷார்ஜா காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!