போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்களை ஏற்றி வந்த முதல் அமீரக விமானம்..!! நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை….!!
இஸ்ரேல்-காஸா போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு தொடர்ந்து உதவிகளை அமீரகம் வழங்கி வருகின்றது. இந்நிலையில் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களை ஏற்றி வந்த முதல் ஐக்கிய அரபு அமீரக விமானம் இன்று காலை அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
எகிப்தில் உள்ள எல் அரிஷ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நெஸ்மா (ஏர்பஸ் A320) விமானத்தில் காயமடைந்த நபர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளதாகவும், அவர்களில் காயமடைந்த ஒன்பது குழந்தைகள் மற்றும் பெண்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட அனைவரும் விமானத்தில் இருந்து ஆம்புலன்ஸ்களுக்கு கவனமாக கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காயமடைந்தவர்கள் எமிரேட்டில் உள்ள புர்ஜீல் ஹோல்டிங்ஸ், NMC ஹெல்த்கேர் மற்றும் அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA) நெட்வொர்க்கின் ஒரு பகுதியான ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மருத்துவமனைகள் எஞ்சியிருக்கும் குழந்தைகளையும் அவர்களது குடும்பங்களையும் அனுமதித்து, சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக சுகாதாரத்துக்கான வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் மஹா பரகத் கூறியுள்ளார்.
முன்னதாக அமீரகத்தின் ஜனாதிபதி, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், காஸா பகுதியில் தவித்து வரும் 1,000 பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தார். உலகெங்கிலும் உள்ள எளிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நீடித்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இது வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்ததில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கூடுதலாக 20 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவித்தொகையை ஒதுக்கீடு செய்யவும், ‘கேலண்ட் நைட்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக காசா பகுதிக்குள் ஒரு ஒருங்கிணைந்த கள மருத்துவமனையை நிறுவவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“ஐக்கிய அரபு அமீரகத் தலைமைக்கு நன்றி. நாங்கள் பாதுகாப்பாகவும் உறுதியுடனும் உணர்கிறோம்” என்று விமானத்தில் வந்திறங்கிய பாலஸ்தீனிய பெண் கூறியுள்ளார். அதே விமானத்தில் நோயாளிகளுடன் வந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பியுள்ள பல விமானங்களில் இது முதல் விமானம் ஆகும், இன்னும் நிறைய காயமடைந்தவர்கள் இங்கு கொண்டு வரப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel