அமீரக செய்திகள்

அமீரகம் வந்திறங்கிய பிரதமர் மோடி..!! “அஹ்லான் மோடி” நிகழ்வில் இந்தியர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக ட்வீட்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்திருக்கும் நிலையில், அபுதாபியில் நடைபெறும் அஹ்லான் மோடி நிகழ்வின் போது இந்திய சமூகத்தை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட X பதிவில், “எங்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் உலகத்துடனான இந்தியாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இன்று மாலை, #AhlanModi நிகழ்ச்சியில் அமீரகத்தின் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்! இந்த மறக்கமுடியாத நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் அபுதாபியில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இதையடுத்து ஜனாதிபதி மாளிகையான கஸ்ர் அல் வதானில் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏழாவது முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின் போது அமீரகத்தின் ஜனாதிபதி அல் நஹ்யானுடன் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்த மற்றும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார் என்றும், பின்னர் பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இன்று மாலை, அபுதாபியில் உள்ள சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெறும் ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மோடியின் உரையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவதால் பதிவுகள் மூடப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டின் ஏழு எமிரேட்களில் இருந்தும் பங்கேற்பாளர்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தநாளான புதன்கிழமையன்று துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாடு 2024ல் பங்கேற்க உள்ளார். துருக்கி மற்றும் கத்தாருடன் இணைந்து இந்தியா ‘கெளரவ விருந்தினராக’ இருக்கும் உச்சிமாநாட்டில் மோடி முக்கிய உரை நிகழ்த்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோரையும் சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து புதன்கிழமை மாலை, அபுதாபியில் மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோயிலான BAPS இந்து மந்திரை மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர், உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் கத்தார் செல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!