அமீரக செய்திகள்

UAE – இந்தியா இடையே கூடுதல் விமானங்களை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. கோடைகால விடுமுறைக்காக சிறப்பு நடவடிக்கை..!!

இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பு, அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு எளிதான பயண அனுபவத்தை வழங்கும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அமீரகத்தில் உள்ள பல பள்ளிகள் கோடை விடுமுறைக்காக மூடப்படும் என்பதால், அமீரகத்தில் குடும்பமாக வசிக்கும் இந்தியர்கள் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். எனவே, இந்த சமயத்தில் விமான டிக்கெட்டின் விலையும் சாதாரண நாட்களை விடவும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ள இந்த கூடுதல் விமான சேவையின் மூலம் பயணிகள் குறைவான கட்டணத்தில் பறக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் UAE – இந்தியா இடையே வாரந்தோறும் 24 விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

இதன்மூலம், அபுதாபிக்கு 14 விமானங்கள் கூடுதலாகவும், துபாய்க்கு 4 விமானங்கள் கூடுதலாகவும், ராஸ் அல் கைமாவிற்கு 6 விமானங்கள் கூடுதலாகவும் வாரந்தோறும் இயக்கப்பட இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. எனினும் ஷார்ஜா மற்றும் அல் அய்னிற்கு பழைய எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படும் எனவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

கூடுதலாக இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்:

நகரங்கள் தற்போது வாரந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கோடை காலத்தில் இயக்கப்பட உள்ள விமானங்களின் எண்ணிக்கை
அபுதாபி 29 43
துபாய் 80 84
ராஸ் அல் கைமா 2 8
ஷார்ஜா 77 77
அல் அய்ன் 2 2

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!