இந்த ஆண்டு கோடை காலம் முழுவதும் திறந்திருக்கும் ‘துபாய் சஃபாரி பார்க்’..!! சிறப்பு பாஸையும் அறிவித்த துபாய் முனிசிபாலிட்டி..!!

துபாயில் உள்ள சுற்றுச்சூழல் நட்பு இடமான துபாய் சஃபாரி பார்க், கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஒரு சிறப்பு கோடைக்கால பாஸ் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் முதல் முறையாக இந்த பூங்கா கோடை காலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளுடன் பொதுமக்களை வரவேற்க உள்ளது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் துறையின் தலைவர் அகமது இப்ராஹிம் அல்ஜரோனி அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் பார்க்கில் இருக்கக்கூடிய விலங்குகளின் தூக்கம் மற்றும் உணவு முறைகளை ஆய்வு செய்த போது வெற்றிகரமாக இருந்ததாகவும், எனவே இந்த ஆண்டு பொதுமக்களுக்கு திறக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, விலங்குகள் கோடைகால வெப்பத்தால் பாதிக்கப்படாமல் வெளியே வர சிறந்த நேரத்தை தேர்வு செய்து, அதன் அடிப்படையில், 10 பேர் கொண்ட சிறிய குழுக்களுக்குக் கிடைக்கும் குறைந்த அளவிலான தினசரி டிக்கெட்டுகளை மட்டுமே விநியோகிப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, துபாய் சஃபாரி பார்க் ஆனது ஜூன் முதல் செப்டம்பர் வரை, சீசன் இல்லாத மாதங்களிலும் சம்மர் டூர்ஸ், சம்மர் சஃபாரி ஜர்னி மற்றும் வாக் இன் தி வைல்ட் ஆகிய மூன்று அனுபவங்களைக் கொண்ட கோடைக்கால பாஸ் டிக்கெட்களுடன் பார்வையாளர்களை வரவேற்கும் என்பது தெரிய வந்துள்ளது.
சஃபாரி அனுபவம் மற்றும் பல்வேறு விலங்குகளுடன் நெருங்கிய சந்திப்புகள் அடங்கிய இந்த சுற்றுப்பயணங்கள் காலையிலும் மாலையிலும் ஒருமுறை நடத்தப்படும் இரண்டு மணிநேர தனிப்பட்ட அனுபவமாகும்.
அதேபோல், சஃபாரி பயணம் ஒரு தனியார், குளிரூட்டப்பட்ட வாகனத்தில் 10 விருந்தினர்கள் அடங்கிய குழுவுக்கு இரண்டு சாகச அனுபவங்களை உறுதியளிக்கிறது. இது 90 நிமிட வழிகாட்டப்பட்ட வாக் இன் தி வைல்ட் சுற்றுப்பயணமாகும், இது சாகச அனுபவங்களைப் பெற விரும்புபவர்களுக்கு அதிகாலையில் வனவிலங்குகளுடன் நெருக்கமாக சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
ஆகையால், பார்வையாளர்கள் இயற்கையில் மூழ்கி, விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்வையிடவும், மறக்கமுடியாத புகைப்படங்களைப் பிடிக்கவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையில் எழுச்சி:
3,000 விலங்குகளுக்கு தாயகமாக உள்ள துபாய் சஃபாரி பூங்கா பார்வையாளர்கள் மற்றும் டிக்கட் விற்பனை எண்ணிக்கையில் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது 2023 ஆம் ஆண்டில், பயண வர்த்தக விற்பனையில் 755 சதவீத வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 119 ஹெக்டேர் அதாவது 166 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பூங்காவில் அல் வாடி, ஆப்பிரிக்கன் வில்லேஜ், எக்ஸ்ப்ளோரர் வில்லேஜ், அரேபியன் பாலைவன சஃபாரி, ஆசியன் வில்லேஜ் மற்றும் கிட்ஸ் ஃபார்ம் என ஆறு மண்டலங்கள் உள்ளன.
10 வெவ்வேறு மாமிச உண்ணிகள், 50 வகையான ஊர்வன, 111 வகையான பறவைகள் மற்றும் 78 வகையான பாலூட்டிகள் வசிக்கும் இந்த பூங்கா நாள் முழுவதும் திட்டமிடப்பட்ட நேரத்தில் தினசரி கல்வி விளக்கக்காட்சிகளை வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, விலங்குகள் மற்றும் பூர்வீக விலங்கினங்கள் செழிக்க உதவும் பரந்த அளவிலான நலன் மற்றும் பாதுகாப்பு உத்திகளையும் துபாய் சஃபாரி பார்க் மேற்கொள்கிறது.
இது தவிர, சர்வதேச இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வெளிப்புற மீட்புப் பணிகள் மூலம் அழிந்து வரும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் இந்த பூங்கா பங்களிக்கிறது, அதே நேரத்தில் விலங்குகள் ஆண்டு முழுவதும் வசதியாக இருப்பதை உறுதிசெய்ய ஏராளமான புதுமையான தொழில்நுட்பங்கள் பூங்காவின் உள்கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel