க்ளாக் டவர் to ஜூமேரா zoo: திறந்தவெளி மியூசியமாக மாறப்போகும் துபாயின் பழமையான 35 முக்கிய அடையாளங்கள்..

துபாயின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு அடையாளங்கள் மற்றும் கட்டிடங்களை பாதுகாக்கும் விதமாக மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, ஜுமேரா உயிரியல் பூங்கா, அல் நாசர் லெசர்லேண்ட், க்ளாக் டவர், ஃபிளேம் மோனுமென்ட் மற்றும் அல் கஸான் பூங்காவில் உள்ள தண்ணீர் தொட்டி ஆகியவை பாதுகாக்கப்படும் 35 கட்டிடங்களில் அடங்கும் என்பது தெரிய வந்துள்ளது.
1960 களில் இருந்து 1990-கள் வரையிலான கட்டிடங்கள் அனைத்தும் துபாயின் சமீபத்திய கட்டிடக்கலை வரலாற்றை பிரதிபலிக்கின்றன மற்றும் துபாயின் வரலாற்று, கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை விவரிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடத்தக்க வரலாற்று சின்னமாகவும் மற்றும் பல ஆண்டுகளாக துபாயின் பயணத்தை கூறும் அடையாளங்களாகவும் விளங்கும் பகுதிகள், தளங்கள் மற்றும் கட்டிடங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கையானது திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். இந்த கட்டம் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் பார்வையை எடுத்துக்காட்டுகிறது என்றும், அவர் அந்த காலகட்டத்தில் நகரத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலை வடிவமைத்தார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, திட்டத்தின் முதல் கட்டத்தில், துபாய் முனிசிபாலிட்டியானது நகரின் முந்தைய வரலாற்று காலகட்டங்களில் இருந்து கட்டிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது. தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டாம் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மிக முக்கியமான 10 தளங்களைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:
1. ஜுமேரா உயிரியல் பூங்கா
ஜுமைரா கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த பூங்கா நாட்டின் ஆரம்பகால உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும், இது 1967 இல் திறக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு சில விலங்குகளை காட்சிப் பொருளாகக் கொண்டு, பூங்கா சிறிதாக இருந்தது. பின்னர், 2017 இல் அதன் அனைத்து உயிரினங்களும் துபாய் சஃபாரி பூங்காவுக்கு மாற்றப்பட்டபோது இது மூடப்பட்டது. இந்த கட்டிடம் எவ்வாறு புதுப்பிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2. அல் நாஸ்ர் லெசர்லேண்ட்
துபாய் மாலில் பிரம்மாண்டமான பனிச் சறுக்கு வளையம் (ice rink) திறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் அல் நாஸ்ர் லெசர்லேண்டில் (Al Nasr Leisureland) உள்ள பனி வளையத்தில் சறுக்கும் (ice rink) அனுபவத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
அமீரகத்தின் பழமையான பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றான இந்த இடம், பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளை தொகுத்து வழங்கியுள்ளது. இப்போது அமீரகம் எங்கும் பெரிய மற்றும் சிறந்த பொழுதுபோக்கு மையங்கள் தோன்றியிருந்தாலும், அல் நாஸ்ர் லெசர்லேண்ட் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களிடையே பிரபலமான ஹேங்கவுட் இடமாக அப்போது இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
3. அல் கசான் பூங்காவில் உள்ள வாட்டர் டேங்க்:
அல் கசான் பகுதியில் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் தனித்துவமாக உயர்ந்து நிற்கும் 40 மீ வாட்டர் டேங்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பூங்கா முதலில் 1980 இல் கட்டப்பட்டது. இந்த வாட்டர் டேங்க் பல துபாய் குடியிருப்பாளர்களின் வாழ்வில் நிரந்தர அங்கமாக இருந்து வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டில், எமிரேட்டின் முதல் “பூஜ்ஜிய ஆற்றல்” பூங்காவாக இந்த பூங்கா மீண்டும் கட்டப்பட்டது.
4. துபாய் முனிசிபாலிட்டியின் மெயின் பில்டிங்:
இந்த கட்டிடம் யூனியன் ஸ்கொயர் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் துபாய் க்ரீக்கில் அமைந்துள்ளது. இது 1979 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு முதல்முறையாக விஜயம் செய்த மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது முனிசிபாலிட்டியின் பல துறைகள் இங்கு செயல்பட்டு வருகிறது.
5. ஷேக் ரஷித் பின் சயீத் பேலஸ் – ஹத்தா
ஹத்தாவிற்கு நடைபாதை சாலைகள் இருந்த நேரத்தில், மறைந்த ஷேக் ரஷித் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் நகரில் விருந்தினர் மாளிகையை கட்டினார். இது அவருக்கு ஓய்வெடுப்பதற்கும் வணிகக் கூட்டங்களை நடத்துவதற்கும் ஒரு இடமாக இருந்தது. அதன் பின்னரே 1979 இல் ஹத்தாவிற்கு ஒரு சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது மற்றும் இது முடிய பல ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.
6. க்ளாக் டவர்
துபாயின் நீண்ட கால அடையாளமான க்ளாக் டவர் 1960களில் கட்டப்பட்டது. தேராவில் அமைந்துள்ள இது, குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தொடர்ந்து கவர்ந்திழுக்கும் ஒரு ஐகானிக் அமைப்பாக உள்ளது. இது பல ஆண்டுகளாக எமிரேட் அரசாங்கத்தால் பலமுறை புனரமைக்கப்பட்டது, கடைசியாக 2023 ஆம் ஆண்டு கோபுரம் 10 மில்லியன் திர்ஹம்கள் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டது.
7. ஜுமேரா மசூதி
வரலாற்று இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியின் கட்டுமானம் 1975 இல் கட்டுமானம் தொடங்கப்பட்டது மற்றும் 1979 இல் திறக்கப்பட்டது.
இதில் 1,200 வழிபாட்டாளர்கள் வரை இருக்கலாம். துபாயில் உள்ள முஸ்லிம் அல்லாத பார்வையாளர்கள் அணுகக்கூடிய சில மசூதிகளில் இதுவும் ஒன்றாகும், இந்த வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படும் மஜ்லிஸ் ஆகியவையும் உள்ளன.
8. தி ஃப்ளேம் மோனுமென்ட் (The Flame Monument)
துபாயின் தேரா பகுதியில் உள்ள ஃப்ளேம் ரவுண்டானாவின் நடுவில் அமைந்துள்ள, நினைவுச் சின்னம் கடந்த 1969 இல் எமிரேட்டில் எண்ணெய் உற்பத்தியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஷேக் ரஷீத் அவர்களால் எரியூட்டப்பட்டது, இது செழிப்பைக் குறிக்கும் ஒரு நினைவுச்சின்னமாகும். பின்னர், ரவுண்டானா இடிக்கப்பட்டதும், நினைவுச்சின்னம் பாதுகாக்கப்பட்டதுடன் தற்பொழுது வரை இருந்து வருகிறது.
9. அல் மக்தூம் மருத்துவமனை
அல் மக்தூம் மருத்துவமனை 1951 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்ட முதல் மருத்துவமனையாகும், இது குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. பின்னர் 2009 இல் இந்த மருத்துவமனை மூடப்பட்டாலும், இது எமிரேட்டின் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனை பராமரிக்கப்படும்.
10. சஃபா பார்க்
1975 இல் உருவாக்கப்பட்ட சஃபா பார்க் துபாயின் புறநகரில் அமைந்துள்ளது. சஃபா பார்க் விரைவில் குடியிருப்பாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அதன் பின்னர் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, விளையாட்டு பகுதிகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டது. 2014ல், ‘வாட்டர் கனல்’ திட்டத்திற்காக, பூங்காவின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் துபாய் வரலாற்றில் அதன் இடத்தைப் போற்றும் வகையில், சஃபா பார்க் கட்டிடமும் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிக்கப்படும் மற்றும் பாதுகாக்கப்படும் மற்ற கட்டிடங்கள்:
- ரஷீத் டவர்
- துபாய் பெட்ரோலிய கட்டிடம்
- துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1
- துபாய் டெலிவிஷன் பில்டிங்
- ஷேக் ரஷீத் பின் சயீத் பேலஸ் – ஜபீல்
- ஹாஸ்பிட்டாலிட்டி பேலஸ்
- ஷேக் ரஷித் பின் சயீத் பள்ளி- ஹத்தா\
- ஜபீல் மேல்நிலைப் பள்ளி
- அல் ராஸ் நூலகம்
- துபாய் நிலத் துறை கட்டிடம்
- ஃபிஷ் ரவுண்டானா
- துபாய் நீதிமன்ற கட்டிடம்
- திவான் கட்டிடம்
- நைஃப் காவல் நிலையம்
- எமிரேட்ஸ் போஸ்ட் பில்டிங் – அல் கராமா
- எமிரேட்ஸ் கோல்ஃப் கிளப்
- துபாய் க்ரீக் கோல்ஃப் கிளப்
- ரஷிதியா கிராண்ட் மசூதி
- அல் ஃபாஹிதி மசூதி
- ஹெல்த் அத்தாரிட்டி மசூதி
- உமர் பின் ஹைதர் மசூதி,
- துபாய் மருத்துவமனை,
- பராஹா மருத்துவமனை
- ரஷித் மருத்துவமனை
- லதீஃபா மருத்துவமனை (அல் வாஸ்ல்)
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel