அமீரகத்தில் இன்று 47 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை.. தூசி, மணலுடன் கூடிய காற்று வீசும் எனவும் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில் இன்றைய தினம் (மே23, வியாழன்) வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அமீரகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இன்று வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில், வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று கணித்துள்ளது. அதன் படி, அபுதாபி மற்றும் துபாயில் முறையே அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் மற்றும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையில், அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும், குறிப்பாக சில உள் பகுதிகளில் தூசி மற்றும் மணலுடன் கூடிய காற்று வீசும் என்றும் வானிலை துறை முன்னறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, காற்றின் வேகம் பெரும்பாலும் மணிக்கு 10-25 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும், உள் பகுதிகளில் மணிக்கு 35 கிமீ வேகத்திலும், கடலோரப் பகுதி மற்றும் தீவுகளில் மணிக்கு 40 கிமீ வேகத்திலும் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமான் கடலில் நிலைமை சற்று லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரேபிய வளைகுடாவில் அலைகள் லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்றாலும், இரவில் அது வடக்கு நோக்கி சில சமயங்களில் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel