குவைத்தில் வெயிலின் தாக்கத்தால் அதிகரிக்கும் மின்நுகர்வு.. ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அதிகாரிகள் தகவல்..!!

வளைகுடா நாடுகளில் தற்சமயம் கோடைகாலத்தை முன்னிட்டு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்சாரம் உபயோகிக்கும் அளவும் இந்த நாடுகளில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக குவைத்தில் கோடைக்கால வெயிலின் தாக்கத்தால் அதிகரித்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய போராடுவதாகக் கூறியுள்ள அரசாங்கம், அதிக மின்சார நுகர்வு ஏற்படும் குறிப்பிட்ட நேரங்களில் நாட்டின் சில பகுதிகளில் தற்காலிக மின்வெட்டினை செயல்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of Electricity, Water and Renewable Energy) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வரை திட்டமிடப்பட்ட மின்தடை ஏற்படும் என்று கூறியுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, வெப்பநிலை உயர்வுக்கு மத்தியில் மின்சாரம் உபயோகிக்கப்படும் உச்ச நேரங்களில் அதிகரித்த மின் தேவையை பூர்த்தி செய்ய மின் உற்பத்தி நிலையங்களின் இயலாமையே இந்த மின்வெட்டுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மின் உற்பத்தி நிலையங்களின் சுமையைக் குறைக்க, சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த குடியிருப்பாளர்களை வலியுறுத்திய அமைச்சகம், நாட்டின் பல பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் மின்வெட்டுக்களின் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (Organization of the Petroleum Exporting Countries -OPEC) மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான குவைத், உலகின் வெப்பமான பாலைவன நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், காலநிலை மாற்றம் காரணமாக கோடையின் தாக்கம் மிகுந்த வெப்பமாகவும் நீண்டதாகவும் மாறியுள்ளது. இதனால் கோடை மாதங்களில் அதிகம் மின் நுகர்வு செய்யக்கூடிய ஏர் கண்டிஷனர்களை நாட்டு மக்கள் நம்பியிருக்கின்றனர்.
குவைத்தில் இன்று (வியாழன்) வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து குவைத் வானியலாளர் மற்றும் விஞ்ஞானி அடெல் அல்-சாடூன் பேசும்போது, “இன்று நாம் அனுபவிப்பது காலநிலை மாற்றத்தின் விளைவாகும், வரும் நாட்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய கடந்த மாதம், கோடை மாதங்களில் ஓமானிடம் இருந்து 300 மெகாவாட் மற்றும் கத்தாரில் இருந்து 200 மெகாவாட் மின்சாரம் உட்பட 500 மெகாவாட் மின்சாரம் வாங்க குவைத் குறுகிய கால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தங்கள் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கிடைக்கும் ஆற்றல் போதுமானதாக இல்லாத சூழலில், வளைகுடா நாடு அதன் எரிசக்தி உள்கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்றும், மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்புவதற்கு பதிலாக, அணுசக்தி, சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலை நோக்கி செல்ல வேண்டும் என்றும் குவைத் எரிசக்தி நிபுணர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel