தனிநபர் வருமான வரியை அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்த முதல் வளைகுடா நாடு..!! மற்ற நாடுகளிலும் அமலுக்கு வருமா..?

ஓமான் நாடானது தனது பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு திட்டமான விஷன் 2040 திட்டத்தின் கீழ் பல புதிய முயற்சிகளை வகுத்து வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எண்ணெய்க்கு அப்பால் நாட்டின் வருவாய் ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தனிநபர் வருமான வரியை (personal income tax) அமல்படுத்தவிருக்கின்றது.
ஓமான் விஷன் 2040 என்பது 2021-2040 காலப்பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூகத் திட்டமிடலுக்கான தேசியக் குறிப்பாகும். மேலும் தேசியத் துறை உத்திகள் மற்றும் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்களின் ஆதாரமாகும். இத்திட்டத்தின் கீழ் ஓமானின் கீழ்சபையான மஜ்லிஸ் அல்-ஷுரா, வருமான வரிக்கான ஒரு வரைவுச் சட்டத்தை அங்கீகரித்து, இறுதி ஒப்புதலுக்காக மேலவையான மாநில கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வரலாற்று ரீதியாக வெளிநாட்டினரை ஈர்க்கவும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் வளைகுடா நாடுகளில் தனிநபர் வருமான வரி கொள்கை இல்லாதது பெரிதும் பங்கு வகித்தது. வெளிநாட்டினர் பலரும் இந்த ஒரு செயலுக்காகவும் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாலுமே வளைகுடா நாடுகளை நோக்கி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஓமானின் இந்த முடிவானது, வருமான வரி இல்லாத கொள்கைக்காக அறியப்பட்ட வளைகுடா பிராந்தியத்தில் முதல் முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்தப்படுவதைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஓமானின் இந்த நடவடிக்கை வரும் காலத்தில் வளைகுடா முழுவதும் இதேபோன்ற நடவடிக்கைகளைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் ஓமானில் முன்மொழியப்பட்டுள்ள வருமான வரி விகிதங்கள் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.
சமீப காலமாக வளைகுடா நாடுகள் தங்களின் வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் பல்வேறு வரி முயற்சிகளை அதிகளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. உலகப் பணக்காரர்களை ஈர்ப்பதற்காக அறியப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம், கடந்த ஆண்டு முதல் முறையாக வணிக லாபத்தின் மீது கூட்டாட்சி நிறுவன வரியை அறிமுகப்படுத்தி, அதன் வணிக நட்பு சூழலை பராமரிக்க 9 சதவீதம் என்ற குறைந்த விகிதத்தில் வரியை நிர்ணயம் செய்திருந்தது.
அதே சமயம் சவூதி அரேபியா கார்ப்பரேட் வருமான வரி விகிதத்தை 20 சதவிகிதம் விதிக்கிறது. மற்றொரு வளைகுடா நாடான கத்தார் 10 சதவிகிதம் விதிக்கிறது. இது போலவே ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகியவை சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு 5 சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரி விகிதத்தை அமல்படுத்தியுள்ளன. மேலும் கொரோனா தொற்றுநோய்களின் போது வருவாய் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில், சவூதி அரேபியா தனது VAT விகிதத்தை 2020 இல் 15 சதவீதமாக உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel