ஜூலை 18-ஐ யூனியன் உறுதிமொழி தினமாக அறிவித்த அமீரகம்.. இந்த நாள் அப்படி என்ன ஸ்பெஷல்..??

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஜூலை 18ம் தேதியை அமீரகத்தின் யூனியன் உறுதிமொழி தினமாக (Union Pledge Day) அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்தாபக தந்தையான ஷேக் சையது மற்றும் எமிரேட்ஸின் சக ஆட்சியாளர்கள் யூனியன் பிரகடனத்தில் கையெழுத்திட்ட வரலாற்று தருணத்தை நினைவு கூறும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதாவது முன்னதாக அமீரகமானது தனித்தனி எமிரேட்டுகளாக இருந்தது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா உள்ளிட்ட ஏழு எமிரேட்டுகளும் ஒன்றிணைந்தே ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. இதற்காக ஜூலை 18, 1971 இல், நடந்த முக்கிய நிகழ்வில் டிசம்பர் 2, 1971 அன்று ஐக்கிய அரபு அமீரகம் எனும் தேசத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவுவதற்கான களம் அமைக்கப்பட்டது. அதில் அனைத்து எமிரேட்ஸின் ஆட்சியாளர்களும் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரகம் எனும் நாடாக உருவாக்குவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமீரக ஜனாதிபதி கூறுகையில் “1971 இல் இந்த நாளில், ஸ்தாபக தந்தையான ஷேக் சையது மற்றும் அவரது சகோதர ஆட்சியாளர்கள் யூனியன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசியலமைப்பின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில் நமது நாட்டின் பெயரை ஐக்கிய அரபு அமீரகம் என அறிவிக்கிறார்கள். டிசம்பர் 2 ஆம் தேதி தேசத்தை நிறுவுவதற்கான செயலில், அவர்கள் அதற்கான அடித்தளத்தை அமைத்த ஒரு வரலாற்று நாள் இது”.
“அதனால் இன்று, ஜூலை 18 ஐ யூனியன் உறுதிமொழி தினமாக அறிவிக்கிறோம். இது நமது நாட்டின் வரலாற்றைக் கொண்டாடும் ஒரு தேசிய நிகழ்வாகவும், தேசத்தை நிறுவுவதற்கான ஆசீர்வதிக்கப்பட்ட பயணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அத்துடன் யூனியன் உறுதிமொழி நாள் மறைந்த ஷேக் சயீத் மற்றும் பிற ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட தேசிய மதிப்புகள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் உறுதிமொழி நாள் என்பது நாட்டின் ஒற்றுமைக்கான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு வரலாற்று மைல்கல் என்று துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவருமான மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
யூனியன் தினம், கொடி நாள் மற்றும் தியாகிகள் நினைவு தினத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் யூனியன் உறுதிமொழி நாள் நான்காவது தேசிய நிகழ்வாகும். அதுமட்டுமல்லாமல் அமீரகத்தின் முதல் யூனியன் உறுதிமொழி நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel