அபுதாபியில் சிம் கார்டைத் திருடியவருக்கு 30,000 திர்ஹம்ஸ் அபராதம்..!! நீதிமன்றம் உத்தரவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் சக ஊழியரின் ஃபோன் மற்றும் சிம் கார்டைத் திருடி, சுமார் நான்கு ஆண்டுகள் வரை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்திய குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட நபருக்கு சுமார் 118,600 திர்ஹம்கள் இழப்பீடு வழங்குமாறு ஆசிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு அபுதாபி குடும்ப, சிவில் மற்றும் நிர்வாக உரிமைகோரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிம் கார்டைத் திருடிய பெண்ணுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த நபர், இழப்பீட்டுத் தொகை மற்றும் தொலைபேசி எண்ணில் இனி வரக்கூடிய கூடுதல் கட்டணங்கள் மற்றும் வழக்கறிஞரின் கட்டணம் மற்றும் நீதிமன்ற செலவுகள் போன்ற அனைத்திற்கும் அந்தப் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்ததில் பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அவர்தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 30,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வழக்கறிஞரின் கட்டணம் மற்றும் நீதிமன்ற செலவுகளை செலுத்துமாறும் அந்த பெண்ணிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்தப் பெண்ணிடம் இன்னும் சிம் கார்டு உள்ளதா அல்லது அவர் அதை ரத்து செய்யவில்லை அல்லது திரும்பப் பெறவில்லை என்பதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம்சாட்டிய நபர் வழங்காததால், தொலைபேசி எண்ணில் வரக்கூடிய எதிர்கால கட்டணங்கள் மற்றும் செலவுகளுக்கு அந்தப் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டில், அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) மொபைல் போன் ஏதேனும் தொலைந்து போனால் அல்லது திருடப்பட்டால் உடனடியாகப் புகாரளிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருந்தது.
மேலும் அவ்வாறு பெறப்படும் புகாரின் அடிப்படையில், சேவை வழங்குநர் வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, தொலைந்து போன தொலைபேசியின் வயர்லெஸ் இணைப்பைத் தடுக்கும் என்று அதிகாரம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel