துபாய்: MBZ சாலையில் 220 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்.. காரை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்த போலீஸ்…
துபாயின் பிரதான சாலைகளில் ஒன்றான ஷேக் முகமது பின் சையத் சாலையில் மணிக்கு 220 கிமீ வேகத்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டி துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பான சாலையில் அவரது உயிருக்கும், சக சாலைப் பயனர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக 220 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதால் துபாய் காவல்துறையின் பொதுப் போக்குவரத்துத் துறை ஓட்டுநரைக் கைது செய்ததுடன் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.
இது குறித்து பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி பேசும்போது, புதன்கிழமை அதிகாலை ஒரு வழக்கமான ரோந்துப் பணியின் போது, ஒரு வாகனம் அதிவேகமாக ஓட்டப்பட்டதை அதிகாரிகள் கவனித்ததாகவும், விளக்குகள் மற்றும் வாய்மொழி எச்சரிக்கைகளைப் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்யும் முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் மேலும் காரின் வேகத்தை அதிகரித்து, மணிக்கு 220 கிமீ வேகத்தைத் தாண்டி, சாலையில் தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் விவரித்துள்ளார்.
இதையடுத்து, அந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவரது பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஓட்டுநர் பொது வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன பறிமுதல் தொடர்பான 2023 ஆம் ஆண்டின் ஆணை எண். 30இன் படி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிப்பதற்கு எதிராக பொறுப்பற்ற ஓட்டுநர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அல் மஸ்ரூயி எடுத்துரைத்துள்ளார்.
மேலும், பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக வாகன ஓட்டிகளை எச்சரித்த அவர், தங்கள் உயிருக்கும், மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் அல்லது சாலையின் நிலைக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எச்சரிகை விடுத்தார்.
குறிப்பாக, அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து, இதுபோன்ற மீறல்களை காவல்துறை பொறுத்துக்கொள்ளாது என்று அல் மஸ்ரூயி பொதுமக்களுக்கு உறுதியளித்தார். அதேசமயம், துபாய் போலீஸ் செயலியில் உள்ள “போலீஸ் ஐ” அம்சம் அல்லது 901 என்ற “We Are All Police” என்ற ஹாட்லைனை அழைப்பதன் மூலம் ஆபத்தான நடத்தைகளைப் புகாரளிக்குமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel