UAE: இந்திய விமான டிக்கெட்டுகளில் 20% வரை தள்ளுபடி அறிவித்துள்ள அமீரக விமான நிறுவனம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான கேரியர்களில் ஒன்றான எதிஹாட் ஏர்வேஸ் இந்தியாவிற்கு விமானச் சேவைகளை தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விமான நிறுவனம் இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், etihad.com மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, இந்தியாவுக்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
குறிப்பாக, அக்டோபர் 1, 2024 முதல் மார்ச் 15, 2025 வரையிலான பயணங்களுக்கு இம்மாதம் செப்டம்பர் 19 முதல் 21 வரை விற்பனை நடைபெறும் என்றும் எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. எதிஹாட் கடந்த செப்டம்பர் 26, 2004 அன்று இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பைக்கு விமானங்களை இயக்கியது, அதைத் தொடர்ந்து 1 டிசம்பர் 2004 அன்று புது தில்லிக்கும் அதன் சேவையை விரிவுபடுத்தியது.
இது குறித்து எதிஹாட் ஏர்வேஸின் CEO அன்டோனோல்டோ நெவ்ஸ் பேசுகையில், இந்தியா எதிஹாட்டுக்கு மூலோபாய ரீதியாக முக்கியமான சந்தை என்றும், எதிஹாட் 2004 ஆம் ஆண்டில் மும்பைக்கு விமானங்களை இயக்கியபோது, இது எதிஹாட்டின் 8 வது உலகளாவிய இடமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் 2030 க்குள் 125 இடங்களுக்கு சேவையை வழங்குவதற்கான இலக்குடன் தற்போது 80 இடங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசிய போது, இந்த ஆண்டு, இந்தியா முழுவதும் உள்ள 11 இடங்களில் இருந்து இந்திய பயணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான விமான விருப்பங்களை வழங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு இந்திய பயணிகளுக்கான இணைப்புக்கான முன்னணி விமான நிறுவனமாக எதிஹாட் திகழ்கிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கூடுதல் அம்சங்களை வழங்கும் எதிஹாட்
எதிஹாட் சமீபத்தில் இந்தி மொழி இணையதளத்தை அறிமுகப்படுத்திய முதல் வெளிநாட்டு கேரியர் ஆக மாறியதுடன் அதன் விருந்தினர்களுக்கு முன்பதிவு அனுபவத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், Etihad இன் விருந்தினர்கள் இப்போது விமானத்தில் சமீபத்திய பாலிவுட் பிளாக்பஸ்டர்கள், பாக்ஸ் செட்கள் மற்றும் மியூசிக் வீடியோக்கள் உட்பட தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்திய திரைப்படங்களை ரசிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel