UAE: தற்போதைய வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் போது, அதை தற்போதைய நிறுவனத்தில் தெரிவிப்பது எப்படி என்பது உட்பட புதிய வேலைக்குச் சுமூகமாக மாற என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது வரை நிறைய கேள்விகள் இருக்கலாம்.
பொதுவாக, அமீரகத்தில் தனியார் துறையில் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு புதிய வேலைக்கு மாறும்போது ஊழியர் கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.
1. எத்தனை நாட்கள் அறிவிப்பு காலம் (notice period) இருக்க வேண்டும்?
நீங்கள் தற்போதைய நிறுவனத்திலிருந்து வெளியேறப் போவதாக முடிவெடுத்து விட்டால், முதலில் உங்கள் அறிவிப்பு காலம் (notice period) எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை வேலை ஒப்பந்தத்தில் சரிபார்க்க வேண்டும். ஒப்பந்தத்தில் விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக அறிவிப்பு காலம் 30 முதல் 90 நாட்கள் வரை இருக்கும்.
மேலும், உங்கள் முடிவைப் பற்றி உங்கள் மேலாளரிடம் பேசுவது நல்லது, ஆனால் உங்கள் அறிவிப்பை வழங்குவதற்கு உங்களின் அறிவிப்புக் காலம் மற்றும் வேலையின் கடைசி நாள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
ஒருவேளை, நீங்கள் சேரவிருக்கும் நிறுவனத்தில் வேலையில் உடனடியாகச் சேர வேண்டியிருந்தால், அவ்வாறு செய்ய நீங்கள் முடிவு செய்தால், அறிவிப்புக் காலத்திற்கு உங்கள் தற்போதைய முதலாளிக்கு நீங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
2. கிராஜுட்டி தொகையைப் பெற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
உங்கள் நிறுவனத்தில் நீங்கள் ஒரு வருடம் தொடர்ச்சியாக வேலை செய்திருந்தால், என்ட்-ஆஃப்-சர்வீஸ் கிராஜுட்டி பணத்திற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். UAE தொழிலாளர் சட்டம் – 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33இன் படி, வேலை ஒப்பந்தம் முடிவடைந்த நாளிலிருந்து 14 நாட்களுக்குள் ஊழியருக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
நிறுவனம் பணம் செலுத்துவதில் தாமதம் செய்தால், ஊழியர்கள் அமைச்சகத்தின் கால் சென்டர் 800 60 அல்லது ஆப் (‘MOHRE’) அல்லது இணையதளம் – mohre.gov.ae மூலம் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் (MOHRE) புகார் தெரிவிக்கலாம்.
3. கடன் நிலுவையில் இருந்தால் என்ன செய்வது?
புதிய வேலைக்கு மாறும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், உங்களிடம் கடன் அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை இருந்தால், உங்கள் கிராஜுட்டியை வங்கி முடக்கலாம்.
பொதுவாக, நிலுவையில் உள்ள கடன்களை ஈடுகட்ட, என்ட்-ஆஃப்-சர்வீஸ் கிராஜுட்டி பணத்தைப் பிடித்துக் கொள்ள வங்கிகளை அனுமதிக்கும் உட்பிரிவுகள் கடன் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, உங்கள் வங்கியுடன் முன்கூட்டியே பேசி உங்கள் வேலையைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும், உங்களுக்கு எளிதாக்கக்கூடிய மாற்று வழிகளை ஆராயவும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
4. புதிய விசாவைப் பெற எவ்வளவு காலம் ஆகும்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா அல்லது கிரீன் விசா போன்ற சுய ஸ்பான்சர் செய்யப்பட்ட விசாவில் நீங்கள் தங்கி இருந்தால், MOHRE ஆல் உங்கள் புதிய பணி அனுமதி்ககாக நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்.
இருப்பினும், நீங்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விசாவில் இருந்திருந்தால், முதலில் உங்கள் விசாவை ரத்து செய்ய வேண்டும், மேலும் புதிய நிறுவனம் உங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்றாலும், சில நேரங்களில் நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5. ILOEக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா?
உங்கள் பாலிசி உங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதே தவிர, நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் இணைக்கப்படவில்லை என்பதால், புதிய வேலைக்கு மாறும்போது நீங்கள் ILOE திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
நீங்கள் ILOE தவணை செலுத்துவதில் எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் பாலிசி காலத்தில் ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்பட்டால், நீங்கள் உங்கள் வேலையை இழந்தால், வேலை இழப்பு காப்பீட்டுத் தொகைக்கு நீங்கள் தகுதியற்றவர் என்று அர்த்தமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel