அமீரக செய்திகள்

அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட வருடாந்திர தேசிய இன்ஃப்ளூயன்ஸா பிரச்சாரத்தில் அபுதாபியில் வசிப்பவர்கள் இப்போது இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“Immunise Yourself…Protect Your Community” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் வருகின்ற மார்ச் 2025 வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS), அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC), சுகாதாரத் துறை அபுதாபி (DoH) மற்றும் துபாய் சுகாதார ஆணையம் (DHA) ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அபுதாபியில், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்ற நிலையில், இந்த தடுப்பூசி அபுதாபியில் வசிக்கும் UAE குடிமக்கள் மற்றும் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்றும், இதில் 115 சுகாதார மையங்களும், தடுப்பூசி வழங்க உரிமம் பெற்ற மருந்தகங்களும் அடங்கும் என்றும் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) ஏற்பாடு செய்த நிகழ்வின் போது, ​​அபுதாபி பொது சுகாதார மையத்தில் (ADPHC) தொற்று நோய்கள் துறையின் செயல் இயக்குனரான டாக்டர் பைசல் அலாபாபி தெரிவித்துள்ளார்.

மேலும், ஏராளமான மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க, பல மொழிகளில் அதிகாரத்தின் சமூக ஊடக சேனல்கள் மூலம் நிறைய பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதாகவும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சுகாதார வசதிகளுக்குச் செல்வதில் சவாலாக இருக்கும் சமூக உறுப்பினர்களுக்கு, தடுப்பூசிகளை வீட்டிலேயே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் விலை:

இதற்கிடையில், துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வசிப்பவர்கள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை 50 திர்ஹம்ஸ் வரை குறைந்த விலையில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நடமாடும் கிளினிக்குகள் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள தொழிலாளர் தங்குமிடங்களுக்குச் சென்று தடுப்பூசிகளை வழங்குவதற்கும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு பொது சுகாதாரத் துறை (EHS) சேவைகளை இலவசமாக வழங்கும் என்றும், இந்தக் குழுவில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர் என்றும் பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் டாக்டர் ஷம்சா மஜித் லூட்டா செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “EHSஇன் சுகாதார வசதிகளில் விலைகள் மிகவும் நியாயமானவை, குடியிருப்பாளர்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் 50 திர்ஹம்கள் மட்டுமே. குடிமக்களுக்கு, இது இலவசம். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, இந்த முன்முயற்சியானது, காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பதுடன், சமீபத்திய உலகளாவிய தடுப்பு உத்திகளுடன் சுகாதார நிபுணர்களை சித்தப்படுத்துகிறது மற்றும் முக்கிய குழுக்களுக்கான தடுப்பூசி கவரேஜை விரிவுபடுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக ஃப்ளூ சீசன் அக்டோபரில் தொடங்கும் என்பதால், இந்த தடுப்பூசி இயக்கமானது பாதுகாப்பான குளிர்காலத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி முழுமையான நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், நோயின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் பொதுவாக 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் பிரச்சாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆறு மாத குழந்தை முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து குடியிருப்பாளர்களும் சமூகத்திற்குள் இந்த நோய்க்கு எதிராக உகந்த பாதுகாப்பை உறுதிசெய்ய காய்ச்சல் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று அமீரகத்தில் உள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த ஆண்டு CDC இன் படி, தடுப்பூசிகளில் காணப்படும் விகாரங்கள் இந்த ஆண்டு வைரஸ்களில் பரவும் விகாரங்களுடன் பொருந்துகின்றன, அதாவது இந்த ஆண்டு இந்த தடுப்பூசியின் செயல்திறன் மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!