துபாய் வரும் பயணிகளை வரவேற்கும் ‘Welcome to Dubai’ ஒளிரும் கலைப்படைப்பு..!! துபாய் முனிசிபாலிட்டியின் புதுமுயற்சி..!!
அதிக எண்ணிக்கையிலான வானுயர் கட்டடங்கள், உயர்தர ஹோட்டல்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு புகழ்பெற்ற துபாயின் அழகியல் தோற்றத்தை பராமரிக்க துபாய் முனிசிபாலிட்டி தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், சுமார் 26 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் விமான நிலையம் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகள் சந்திப்பில் ‘Welcome to Dubai’ என அரபு மற்றும் ஆங்கில எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒளிரும் அமைப்பு துபாய் முனிசிபாலிட்டியால் உருவாக்கப்பட்டுள்ளது.
துபாயில் தொடங்கப்பட்டுள்ள ‘பசுமைவெளி’ என்பது எமிரேட்டின் மிகப்பெரிய அழகுபடுத்தும் திட்டங்களில் ஒன்றாகும். துபாய் முனிசிபாலிட்டியால் (DM) மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஒளிரும் எழுத்துக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குடிமை அமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 360,000 சதுர மீட்டர் பரப்பளவில் அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகளில் புதுமையான விளக்குகள் போன்ற அலங்கார கூறுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒளிரும் கலைப்படைப்பு, துபாய்க்கு வருபவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்த வரவேற்புச் செய்தி பகல்நேரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு காட்சியளிக்கும்.
இந்த கலைப்படைப்பின் ஒரு பகுதியாக, பல்வேறு வகையான தாவரங்களுடன் 50,000 தாவரங்கள் மற்றும் புதர்களும் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியின் அழகியல் கவர்ச்சியை மெருகேற்ற இவை கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதில் இடம்பெற்றுள்ள புதுமையான தாவர வேலிகள் இந்த வடிவமைப்பிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன நீர்ப்பாசன முறையானது, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்த நீர் செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில் பசுமையை பராமரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி பேசும் போது, UAEயின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, துபாயை உலகின் சிறந்த நகரமாக நிலைநிறுத்துவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
“சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் நகர்ப்புற வளர்ச்சியை வெற்றிகரமாக சமநிலைப்படுத்தும் இயற்கைக் காட்சிப்பொலிவூட்டல் (landscaping) மூலம், நகரத்தின் கவர்ச்சியை அதிகரிக்க செயல்படுத்தப்படும் துபாய் முனிசிபாலிட்டியின் பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், உலகளாவிய சுற்றுலாத் தலமாக துபாயின் தனித்துவமான தோற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் தாவரங்களை அதிகரிக்கவும் அழகியல் அம்சங்களை உருவாக்கவும் எமிரேட் முழுவதும் இதேபோன்ற இடங்களை தொடர்ந்து துபாய் முனிசிபாலிட்டி உருவாக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு, துபாயின் பசுமையான இடங்களை 105 சதவிகிதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தை துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அறிமுகப்படுத்தினார். இதன் ஒரு பகுதியாக, மேலும் பசுமையாக்கும் திட்டங்களை செயல்படுத்த துபாய் முனிசிபாலிட்டி திட்டமிட்டுள்ளது. அதன் படி, எமிரேட்டில் சேவை பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பணியிடங்களை இணைக்க பல பசுமை வழிச்சாலைகள் நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel