துபாய்: முக்கிய இடங்களில் நவம்பரில் இருந்து குறையும் போக்குவரத்து நெரிசல்.. காரணம் இதுதான்..!!
துபாயில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் ஓட்டுனர்கள் அவர்களின் இலக்கை அடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் துபாய் அரசாங்கமும் இத்தகைய போக்குவரத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்பாலங்கள் கட்டுதல் என பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு வாகன ஓட்டிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும் துபாயின் புதிய போக்குவரத்து திட்டங்கள் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகள் வெளியாகியுள்ளன. துபாய்வாசிகளின் இயக்கத்தை எளிதாக்கும் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
புதிய சாலிக் கேட்கள்
பிசினஸ் பே (அல் கைல் சாலை)யில் ஒரு சாலிக் கேட் மற்றும் ஷேக் சயீத் சாலையில் மேதான் மற்றும் உம் அல் ஷீஃப் சாலைக்கு இடையில் ஒரு சாலிக் கேட் என துபாயில் மொத்தம் இரண்டு புதிய சாலிக் கேட்கள் திறக்கப்படவுள்ளன.
ஷேக் சையத் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் அல் சஃபா சவுத் டோல் கேட்டானது அல் மேதான் மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட்களில் இருந்து ஷேக் சையத் சாலை வரையிலான போக்குவரத்து நெரிசலை சுமார் 42 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள், துபாயில் இந்த இரண்டு புதிய சாலிக் வாயில்கள் செயல்படத் தொடங்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் அல் கைல் சாலை, ரெபாத் ஸ்ட்ரீட், ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் அல்லது ஷேக் சையத் சாலையில் சென்றாலும், மிகவும் வேகமான மற்றும் மென்மையான பயணத்தை அனுபவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஷேக் சையத் சாலையில் உள்ள புதிய சாலிக் கேட் தற்போதைய அல் சஃபா டோல் கேட் உடன் இணைந்து செயல்படும் என்றும் மம்சார் டோல் கேட்கள் செயல்படுவதைப் போலவே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கேட் துபாய் கேனலில் பாலத்தின் மறுமுனையில் இருக்கும், மேலும் இரண்டு வாயில்களையும் ஒரு மணி நேரத்திற்குள் கடந்தால், ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிசினஸ் பே கிராசிங்கில் உள்ள சாலிக் கேட் எவ்வாறு பயனளிக்கும்?
- ஜெபல் அலியிலிருந்து ஷேக் முகமது பின் சையத் மற்றும் எமிரேட்ஸ் சாலைகளுக்கு போக்குவரத்தை மாற்றியமைக்கும்.
- அல் கைல் சாலையின் போக்குவரத்து நெரிசலை 15 சதவீதம் வரை குறைக்கும்.
- அல் ரெபாத் ஸ்ட்ரீட்டில் போக்குவரத்து நெரிசலை 16 சதவீதம் வரை குறைக்கும்.
- ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்டில் நெரிசலை 5 சதவீதம் குறைக்கும்
- அல் ரெபாத் மற்றும் ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட் இடையே உள்ள அல் கைல் சாலையில், மொத்த பயண நேரத்தை இரு திசைகளிலும் தினமும் 20,000 மணிநேரம் குறைக்கும்.
அல் சஃபா சவுத் சாலிக் கேட் ஓட்டுநர்களுக்கு எப்படி உதவுகிறது?
- ஷேக் சையத் சாலையில் இருந்து அல் மேதான் ஸ்ட்ரீட் வரை வலதுபுறம் திரும்பும் போக்குவரத்தை 15 சதவீதம் குறைக்கும்
- அல் மேதான் மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட்களில் இருந்து ஷேக் சையத் சாலை வரையிலான நெரிசல் சுமார் 42 சதவீதம் குறைக்கப்படும்.
- ஷேக் சையத் சாலையில் ஃபைனான்சியல் சென்டர் மற்றும் லதிஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட்களுக்கு இடையே உள்ள நெரிசல் நான்கு சதவீதம் குறையும்.
- ஃபர்ஸ்ட் அல் கைல் சாலை மற்றும் அல் அசாயல் ஸ்ட்ரீட்களின் பயன்பாட்டை நான்கு சதவீதம் மேம்படுத்தப்படும்.
மேற்கூறிய அனைத்து வழித்தடங்களும் புதிய சாலிக் கேட்கள் செயல்பாட்டுக்கு வந்தவுடன் போக்குவரத்து ஓட்டத்தில் முன்னேற்றத்தை அனுபவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாலங்கள்
செப்டம்பர் 1 ஆம் தேதி, அல் கைல் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டு புதிய பாலங்களைத் RTA அறிவித்துள்ளது. முதல் பாலம் ஜாபீலில் அமைந்துள்ளது. 700 மீட்டர் நீளமுள்ள இந்த புதிய மூன்று வழி ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் பிரிட்ஜ், இப்போது ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஓத் மேத்தா சாலையை அபுதாபியின் திசையில் அல் கைல் சாலையுடன் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பாலம் ஒரு மணி நேரத்திற்கு 4,800 வாகனங்களைக் கையாளக்கூடியதாக இருக்கும் என்றும், மேலும் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது
இரண்டாவது பாலம் அல் கூஸ் 1 இல் அமைந்துள்ளது. 650-மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரண்டு பாதைகளைக் கொண்டுள்ளது. இது அல் மேதான் ஸ்ட்ரீட்டிலிருந்து அல் கைல் சாலையை ஜெபல் அலி நோக்கி இணைக்கிறது.
அல் கைல் சாலையில் நீங்கள் வாகனம் ஓட்டினால், இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் சாலைப் பணிகளை கவனிக்கலாம். RTA ஆனது நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் வேலையைப் பிரித்துள்ளது, மேலும் அக்டோபரில் மூன்று புதிய பாலங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தேராவை நோக்கிச் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, அமீரகத்தில் உள்ள பள்ளிப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளின் மேம்பாடுகளையும் ஆணையம் சமீபத்தில் அறிவித்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel