அமீரகத்தில் படிப்படியாக குறையும் வெப்பநிலை.. குளிர்காலம் எப்போது துவங்கும்..??
ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான கோடைகாலத்தைக் கடந்து படிப்படியாக குளிர்ந்த வானிலைக்கு மாறி வரும் நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை மீண்டும் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தலைநகர் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் கடுமையான மூடுபனி உருவாகியுள்ளதால் நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையமானது (NCM) அவ்வப்போது மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றது.
NCM வெளியிட்ட அறிக்கையின் படி, பனிமூட்டமான நிலை காலை 9 மணி வரை நீடிக்கும் மற்றும் சாலைகளில் பார்வைத்திறன் 1000 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது, அரேபிய வளைகுடாவின் வடமேற்கிலிருந்து அமீரகத்திற்கு வரும் காற்றில் ஈரப்பதத்தை கண்காணித்து வருவதாகவும், நாடு முழுவதும் ஈரப்பதமான காற்றழுத்தம் உருவாகியிருப்பதால், பனி மூட்டம் உருவாவதாகவும் NCM இன் மூத்த வானிலை ஆய்வாளர் டாக்டர் அஹ்மத் ஹபீப் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த காற்றழுத்தம் படிப்படியாக மழை மேகங்கள் உருவாகவும், இந்த வார இறுதியில் நாட்டின் கிழக்கு பகுதிகளில் மழை பெய்யவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேகமூட்டமான வானிலை மற்றும் மழை முன்னறிவிப்பு
NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின்படி, மூடுபனி மற்றும் ஓரளவு மேகமூட்டமான வானிலை செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 1, 2024 செவ்வாய் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைச் சுற்றி செப்டம்பர் 29 வரை மூடுபனி மற்றும் மேகமூட்டமான நிலைகள் எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் ஹபீப் மேலும் கூறியுள்ளார்.
குளிர்காலம் எப்போது தொடங்கும்?
வானிலை ஆய்வாளர் டாக்டர் ஹபீப் அவர்களின் கூற்றுப்படி, அமீரகத்தில் குளிர்ச்சியான வானிலையை அனுபவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும். தற்சமயம், நாடு முழுவதும் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. அக்டோபர் நடுப்பகுதியில் வெப்பநிலையில் சரியான வீழ்ச்சியைக் காண வாய்ப்புள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை கடலோரப் பகுதிகளில் 30 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், உள் பகுதிகளில் 37 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரையிலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel